2030 இல் உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக இந்தியா

- நிபுணர்கள் கருத்து

உலகப் பொருளாதார நெருக்கடியைக் கையாளவென உரிய நேரகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக வலுவான உள்நாட்டு சந்தையுடன் உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக 2030 இல் இந்தியா மாறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் குறிப்பிடுகையில், 'கவர்ச்சிகரமான உள்நாட்டுச் சந்தையைக் கொண்டுள்ள இந்தியா நேரடி முதலீடுகளுக்கு மிகப் பொருத்தமான இடமாகவும் உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றன' என்றுள்ளார். 

இதேவேளை அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேம்படுத்துதல், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் என்பன குறித்து முன்னணி வர்த்தகர்களுடனும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் கைத்தொழில்துறை தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இச்சமயம் மத்திய அமைச்சர் கோயல், 'வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொழில்முயற்சியாளர்களும் இந்தியாவை அபிவிருத்தி அடைந்த நாடாக மேம்படுத்துவதற்கான பயணத்தில் பங்கெடுக்க முன்வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு பொன்னான நேரம்.

வலுவானதும் தீர்க்கமானதுமான தலைமை, அரசியல் ஸ்தீரத்தன்மை, உறுதியான கொள்கைகள், வெளிப்படைத்தன்மை மிக்க திறந்த பொருளாதாரம், சிறந்த ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி முறைகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களையும் இளம் உழைக்கும் மக்கள்தொகையை அதிகளவில் கொண்டுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது, இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நீண்ட காலம் முக்கிய உந்துதலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.  

இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அமெரிக்கக் கம்பனிகளின் உயர்மட்ட அதிகாரிகள் தம் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஜே.சி 2 வென்சர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் சேம்பர்ஸ், 'அடுத்த பத்தாண்டுகளில் உலகிலேயே மிக வேகமாக வளரும் மொத்த தேசிய உற்பத்தியைக் கொண்ட நாடாக இந்தியா விளங்கும்.  இரண்டு ஆண்டுகளில் 5 ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதாரத்தை கொண்ட நாடாக மாறும் நிலையில் இந்தியா பயணிக்கிறது. இதில் மாற்றுக்கருத்தக்கு இடமில்லை. என்றாலும் இந்தியாவுக்கு கூட்டாண்மையும் நம்பிக்கையும் அவசியமான நேரமிது என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாய்வானைத் தளமாகக் கொண்டுள்ள பல்தேசிய ஒப்பந்த இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான பொக்ஸ்கொன், வேடன்டா கம்பனியுடன் இணைந்து குஜராத்தில் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேல் முதலிட முன்வந்துள்ளது. இதன் ஊடாக ஒரு இலட்சம் நேரடி தொழில்வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...