முதலைக்குடா மகாவித்தியாலய மாணவன் யுவராஜ் படைத்துள்ள சாதனை மிகப்பெரியது

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் புகழாரம்

மட்டுநகருக்கு சென்றால் மாத்திரமே மருத்துவத் துறைக்கு செல்லலாம் என்ற மனநிலையை துணிந்து மாற்றி அமைத்தவர் மாணவன் யுவராஜ். அவர் ஒரு வரலாறு. எமது வலயத்திலும், இப்பாடசாலையிலும் முதன்முதலாக தெரிவான மருத்துவத்துறை மாணவன் யுவராஜ். அவரை வலயம் சார்பில் மனதார வாழ்த்துகிறேன் என்று மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் புகழாரம் சூட்டினார் .

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் முதன்முதலாக மருத்துவத் துறைக்குத் தெரிவான, முதலைக்குடா மகாவித்தியாலய மாணவன் ரவீந்திரன் யுவராஜ் அவர்களைப் பாராட்டும் நிகழ்வு முதலைக்குடா மகாவித்தியாலயத்தில் அதிபர் த.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்றது .

பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த பாராட்டு விழாவில் ,முன்னாள் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் கே. பாஸ்கரன், பிரதிக் கல்வி பணிப்பாளர்களான என்.குகதாசன், ரி.யசோதரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் எம். உதயகுமார், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என். தயாசீலன், ஓய்வுநிலை கோட்டக் கல்வி பணிப்பாளர் த.சோமசுந்தரம், முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர்களான சிவ.அகிலேஸ்வரன், எஸ். சின்னத்தம்பிப்போடி மற்றும் முன்னாள் அதிபர்களான ஜீ. சண்முகநாதன், பி. தங்கவேல் அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.

அங்கு கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மேலும் உரையாற்றுகையில், “கொவிட் காலத்திலும் யுவராஜின் விடாமுயற்சி இன்று சாதனை படைத்திருக்கின்றது. யுவராஜ் இடமிருந்து ஏனைய மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் அவர் தன்னில் நம்பிக்கை வைத்தார். ஆசிரியர்களில் நம்பிக்கை வைத்தார். மிகக் கடுமையாக உழைத்தார். மூன்றுமே அவரை இன்று வைத்தியத் துறைக்கு அனுப்பின. ஏனைய மாணவர்களும் தன் மீது நம்பிக்கை வைத்து படிக்க வேண்டும். இப்பிரதேசத்தில் சாதாரணதரம் நன்றாக சித்திஅடைந்து விட்டால் மட்டுநகருக்கு செல்ல வேண்டும் என்று எமது அலுவலகத்திற்கு படையெடுப்பார்கள். எல்லோரும் நகருக்கு சென்றால் இங்கு யார் படிப்பது என்பது கேள்வி.

எனவே ,பாடசாலையில் நம்பிக்கை வைத்து, ஆசிரியர்களில் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படித்தால் எங்கிருந்தாலும் சிறப்பாக சித்தி அடைய முடியும். மாணவர்களின் கடுமையான உழைப்பு இந்த வெற்றிக்கு காரணமாய் இருக்கின்றது.

எனவே, இங்கு இருக்கக் கூடிய இன்னும் 80 நாட்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றஇருக்கின்ற மாணவர்கள் கடுமையான உழைப்பை மேற்கொண்டால் நிச்சயமாக இவர் போல் சித்தி அடைய முடியும்.

யுவராஜின் பெருமை வரலாறாகி விட்டது. இன்னும் நூறு வைத்தியர்கள் வந்தாலும் வலயத்தில் வந்த முதல் டொக்டர் யுவராஜ்தான் என்ற பெருமை நிலைக்கும்.

இனிமேல் பலர் வைத்தியத் துறைக்கு வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. இங்கு உயர்தரம் கற்பித்த விஞ்ஞான ஆசிரியர்களை நான் மனமாரப் பாராட்டுகின்றேன். அவர்கள் நகருக்கு செல்ல வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் அக்கறையுடன் மாணவர்களை கற்பித்தார்கள். அந்த அடைவுதான் யுவராஜ்ஜின் தெரிவு.

இப்பகுதியில் விஞ்ஞான கல்வியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு மாத்திரமல்ல பெற்றோர்களுக்கும் இருக்கிறது. இப்பாடசாலை சமூகத்தோடு இணைந்து செல்கின்றது. அந்தக் காரணத்தினால் இன்று இந்த வெற்றியை காட்டி இருக்கின்றது.

ஒரு சமூகம் நன்றாக வர வேண்டுமானாலும் விஞ்ஞானம் படிக்க வேண்டும். ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் விஞ்ஞானத்தில் சிறப்பாக வர வேண்டும். இங்கு மாணவரின் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். அம்மா அப்பாவுக்கு அப்பால் அம்மம்மா சித்தப்பா வரையும் பலரை அந்த மாணவன் மேடைக்கு அழைத்து இருந்தான். எனவே அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். இதனை ஏற்பாடு செய்த பழைய மாணவர் சங்கத்திற்கு எனது பிரத்தியேக பாராட்டுக்கள்” என்றார்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...