சம்மாந்துறை பிரதேச அபிவிருத்திக்காக உழைத்த அப்துர் ரஸ்ஸாக் முகம்மதலி

சம்மாந்துறையின் பூமரச்சந்தி பகுதியில் வாழ்ந்த முகம்மதலி தம்பதியரின் மகன் அப்துர் ரஸ்ஸாக் முகம்மதலி ஆவார். தௌபீக் என்றும் இவர் அழைக்கப்பட்டார். ஏ.ஆர்.முகம்மதலி சிறுவயதில் கொழும்பு உவெஸ்லி கல்லூரியில் கற்ற பின்னர் பட்டப்படிப்புக்காக லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானமாணி தேர்வுக்காகப் படித்துக் கொணடிருக்கும் போது ஆசிரிய சேவையில் கால்பதித்தார்.

1961இல் கொழும்பு ஸாஹிறா கல்லூரியில் ஆசிரியரானார். பாடசாலைப் பருவத்தில் கரப்பந்து, கால்பந்து கிரிக்கட் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய இவர், கிரிக்கட் விளையாட்டிற்கான பொறுப்பாசிரியராகவும் 1967 இல் கொழும்பு அல்-ஹிதாயா மஹா வித்தியாலயத்தில் விளையாட்டுத்துறைக்கும், மாணவர் ஒழுக்கத் திற்குமான Discipline Teacherஆகவும் நியமிக்கப்பட்டார்.

1971 இல் சம்மாந்துறை மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார். மாணவர்களையும் பழைய மாணவர்களையும் இணைத்துக் கொண்டு விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்தினார்.

இவர் அதிபராகப் பணிபுரிந்த காலத்தில் விஞ்ஞானப்பிரிவை அபிவிருத்தி செய்த அதேசமயத்தில் ஏனைய துறைகளிலும் பட்டப்படிப்பிற்காக மாணவர்களைத் தயார் செய்வதில் உந்துசக்தியாகத் திகழ்ந்தார். இதனால் கூடுதலான மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். இக்காலத்தில்தான் பேருவளை சீனன் கோட்டையைச் சேர்ந்த நளீம் ஹாஜியார் முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காக தேசிய ரீதியில் இஸ்லாமிய மறு மலர்ச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை உருவாக்கினார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த விரும்பிய ஏ.ஆர். முகம்மதலி சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்கள் அனைவரும் பயன்பெற தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார். இவரது காலத்தில் 13 வைத்தியர்களையும் 32 பொறியியலாளர்களையும் 115 கலைப் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

இக்காலங்களில் சம்மாந்துறை பட்டின சபையின் தவிசாளராகவிருந்து காணி விவசாய பிரதி அமைச்சரின் அந்தரங்கச் செயலாளராகவும் போக்குவரத்து அமைச்சின் கிழக்குப் பிராந்தியத்திற்கான தவிசாளராகவும் கடமை புரிந்த எம்.ஏ.அமீர் அலி திடீரென சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.

1980 இல் அதிபர் ஏ.ஆர் முகம்மதலி போக்குவரத்து அமைச்சின் கிழக்குப்பிராந்திய சபைக்கான தவிசாளராக நியமனம் பெற்றார்.

இவரது காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் தூர இடங்களிலிருந்து பாடசாலைகக்குச் செல்லும் மாணவர்களுக்கான பஸ்சேவை, விவசா யிகளுக்கான போக்குவரத்துச் சேவை திருமலை-மூதூர் கடல் வழிப் பிரயாண கப்பல் சேவை, நகரங்களுக்கிடையில் தூர இடங்களுக்கான பஸ்சேவை என்பன சிறப்பாகச் செயற்பட்டன.

1991 முதல் நெசவுக் கைத்தொழில் அமைச்சராகவிருந்த எம்.ஏ.அப்துல் மஜீத் அவர்களின் அந்தரங்கச் செயலாளராகவும் பணிபுரிந்தார். 1994 இல் முழுமையாக அரசியலில் இறங்கினார். சம்மாந்துறைப் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்து சேவையாற்றினார்.

இவர் அதிபராக செயலாற்றிய காலத்தில் சம்மாந்துறையில் உள்ள துறை சார்ந்த கல்விமான்களை அழைத்து சம்மாந்துறையின் அபிவிருத்தி சம்பந்தமாக பாடுபட்டார். 2022.03.30 அவர் காலமானார்.

சம்மாந்துறை மண்ணிண் முதுசங்களில் ஒன்றான அப்துர் ரஸ்ஸாக் முகம்மதலி அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை ஆகும்.

கலாபூணம், தேசமான்ய 

ஏ.சி.ஏ.எம். புஹாரி மௌலவி (கபூரி)


Add new comment

Or log in with...