முதியோரை அரவணைப்பதே இன்றைய இளையோர் செலுத்துகின்ற நன்றிக்கடன்!

சர்வதேச முதியோர் தினம் நாளை

மனித இனத்தில் பல பருவங்கள் உள்ளன. இதன் இறுதிப் பருவம்தான் முதுமை பருவமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் இந்தப் பருவத்தினர் கண்ணியமாகவும் கௌரவமாகவும் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியை சர்வதேச முதியோர் தினமாகப் பிரகனப்படுத்தி முதியோர்களை கௌரவப்படுத்தி வருகின்றது.

இன்றைய நவநாகரிக உலகிலே முதியோர் என்றால் அதன் முக்கியத்துவம் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உணரப்படுவதில்லை. இது ஒரு தூரதிர்ஷ்டமாகும் 1991 ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வரும் இந்த முதியோர் தினம் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேசிய விடுமுறை தினமாகவும் ஜப்பானில் முதியோர்களை கௌரவிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

இன்று சிரேஷ்ட பிரஜைகள் என்று அழைக்கப்படுகின்ற இந்த முதியோர் யார் என்பதை நாம் சிந்தித்து பார்ப்போமானால் அவர்கள் யாருமில்லை. பல கஷ்டங்களுக்கு மத்தியில் நம்மை வளர்த்து அறிவூட்டி, சமுதாயத்தின் முன் நம்மை வாழ வைத்தவர்கள் அவர்கள். பல்துறை சார்ந்த அனுபவமும் ஆற்றலும் கொண்ட அவர்கள் நமது எதிர்கால நலனுக்காக உழைத்து உருக்குலைந்தவர்கள் என்பதை மறந்து விடலாகாது.

ஆனால் முதியோர்களின் கடந்தகால சிறப்புமிக்க செயற்பாடுகள் சமுதாயத்தில் உணரப்படுவதில்லை, நினைவுபடுத்தப்படுவதுமில்லை. இது மனவேதனையான விடயமாகும்.

முதியோர்கள் அன்பாக, பண்பாக, பாசத்தோடு பிள்ளைகளால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இது பிள்ளைகளின் தலையான கடமை.சில பிள்ளைகள் பெற்றோரை கவனிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.இவ்வாறான பிள்ளைகளிடமிருந்து முதியோர் பராமரிப்பு பெறமுடியுமென முதியோர் உரிமை பாதுகாப்புச்சட்டத்தின் 15(1) ம் பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளைகள் பெற்றோரை பேணிப்பாதுகாக்க வேண்டுமெனவும் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் அது பிள்ளைகளின் கடமையெனவும் இப்பிரிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதுமைப் பருவத்தை அடைந்த பலர் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது. வறுமை, பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலை, மருத்துவ கவனிப்பின்மை, நீரிழிவு நோய், பார்வைக் குறைவு என்றெல்லாம் பலவிதத்திலும் முதியோர்கள் பாதிக்கப்பட்டு துன்பங்களுடன் வாழ்ந்து வருவதைக் காண்கின்றோம்.

இன்றைய நவீன மருத்துவ ஆராய்ச்சியின் பயனாக உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் மனிதனின் ஆயுள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இது குறித்து மருத்துவ உலகம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் முதியோர்களின் ஆயுள் அதிகரிப்பதால் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற சவால்களையும் அரசாங்கம் நிறைவு செய்ய தயாராக வேண்டும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் முதியோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் முதியோர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம், 2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க முதியோர் பாதுகாப்புச் சட்டத்தினை இயற்றி இச்சட்டத்தினூடாக முதியோர்களின் உடல், உள, சமய சமூக நலன்புரி நடவடிக்கைகளில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றது.

மேலும் முதியோர்களுக்கான தேசிய சபையும் அமைக்கப்பட்டு இதனூடாக முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்தும் தீர்வினை பெற்றுக் கொள்வதோடு முதியோர்கள் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இலவச சட்ட உதவிகள் பெற வசதிகள் இருந்த போதிலும் பெரும்பாலான முதியோர் இது தொடர்பில் அறிந்திராதவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு தேசியரீதியில் விழிப்பூட்டல் கருத்தரங்குகளை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

முதியோர்கள் தாங்கள் செய்த தொழிலிருந்து ஓய்வு பெற்றதும், அவர்களுக்கு வீட்டிலிருந்த மதிப்பும் மரியாதையும் நாளடைவில் குறைந்து வருகின்றது. சில வேளைகளில் கடினமான வார்த்தைகளையும் தாங்கிக் கொண்டு வேதனையோடு பரிதாப நிலையில் வாழ்ந்து வருவதையும் அறியக் கூடியதாக உள்ளது.

இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் முதுமைப் பருவத்தினை வெறுப்போடு நோக்குகின்றனர். இந்த வெறுப்பின் காரணமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட பல பெற்றோர் வீதியோரங்களிலும், அநாதை இல்லங்களிலும் வேதனையோடு வாழ்ந்து வருகின்றனர்.

முதுமைக் காலத்தில் தனிமை, நிம்மதியற்ற நிலை, ஏக்கம் என்பன நிறைந்திருக்கும். இவற்றை மறந்து சந்தோஷமாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமாயின் தினமும் மக்களுடன் தொடர்புடைய அமைப்புகள், சிரமதானப் பணிகள் போன்ற சமூகநலப் பணிகளில் இணைந்து ஈடுபடுவதன் மூலம் தனிமை மற்றும் ஏக்கங்கள் அகன்று விடும்.முதுமைக் காலத்தில் சத்துணவு, உடற்பயிற்சி, வேளை தவறாத மருந்துப் பாவனை,போதியளவு தூக்கம் மற்றும் ஓய்வு என்பன மிக முக்கியமாகும். முதியோர்களின் உடல்நல ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் சத்துணவுகளைச் சேர்த்துக் கொள்வதோடு நாளாந்தம் உடற்பயிற்சியில் ஈடுபடுதல்,வைத்திய ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளல். போதுமான அளவு நீர் அருந்துதல், மற்றும் ஓய்வெடுத்தல் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

புகைத்தல், மதுபானம் அருந்துதல், வெற்றிலை போடுதல், போதைப்பொருள் பாவனை என்பவற்றை முற்றாக தடுத்துக் கொள்வதோடு கொழுப்பு, இனிப்பு, மற்றும் மாமிச உணவுகளையும் முடிந்தளவு குறைத்துக் கொள்வதன் ஊடாக பல நோய்களிலிருந்து உடல் நலத்தை பாதுகாத்துக் கொண்டு சுகமாக வாழ முடியும்.

முதியோர்களை அரவணைத்து செயல்படுவதே நாம் முதியோருக்கு வழங்கும் மதிப்பும் மரியாதையுமாகும்.

கலாபூஷணம்

M.T.A கபூர்...

நிந்தவூர்


Add new comment

Or log in with...