இலங்கை லெஜன்ட்ஸின் அரையிறுதி ஆட்டம் இன்று

வீதிப் பாதுகாப்பு டி20 உலகத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி இன்று (29) மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் தோல்வியுறாத அணியாகவே டி.எம் டில்ஷான் தலைமையிலான அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில் கடந்த செவ்வாய்க்கிழமை ரைப்பூரில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் 70 ஓட்ட வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டி இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணிக்கு ஆரம்ப வீரராக வந்த சனத் ஜயசூரிய 25 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஹேல உடவத்த 43 ஓட்டங்களை பெற்றதோடு டில்ஷான் 30 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் இலங்கை லெஜன்ட்ஸ் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது. இதன்படி பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியுடனான அரையிறுதிப் போட்டி இன்று மாலை 7.30க்கு ரைபூரில் ஆரம்பமாகவுள்ளது.


Add new comment

Or log in with...