கஜிமாவத்தை தீ; இடம்பெயர்ந்தோருக்கு நிவாரணம்; பக்கச்சார்பற்ற விசாரணை

- ஒன்றரை வருடத்திற்குள் மூன்று முறை தீப்பிடிப்பு
- 60 வீடுகள் முழுமையாக, 11 வீடுகள் பகுதியளவில் சேதம்
- இடம்பெயர்ந்த 306 பேரில் 106 சிறுவர்கள்
- திங்கள் பாடசாலை செல்வதற்கு அவசியமான நடவடிக்கை

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க, கஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் நேற்றுமுன்தினம் (27) இரவு ஏற்பட்ட தீயினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (28) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு மாவட்டச் செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 71 வீடுகளில் இருந்த 306 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 60 வீடுகள் முழுமையாகவும், 11 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள 306 பேரில் 106 சிறுவர்கள் அடங்குவர். இதற்கமைய, பாதிக்கப்பட்ட மக்கள் மோதரை உயன சனசமூக மண்டபத்திலும் களனி நதீ விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபை, மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, பொலிஸார் மற்றும் முப்படை ஆகியன இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, பானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான சுகாதார வசதிகள், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகிறது. சர்வோதய உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் அக்குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கப்பட்டதாகவும் மாவட்டச் செயலாளர் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் பாலத்துரை கஜீமாவத்தை குடியிருப்புகள், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடைநிலை முகாமாக பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், 2014 ஆம் ஆண்டு இறுதியில் அங்கு வசித்தவர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் 2015ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை, சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அவ்வப்போது ஆக்கிரமித்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி வீடுகள் கடந்த இரண்டு வருடங்களுள் 03 தடவைகள் தீக்கிரையாகி இருப்பதனால், நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கலந்துரையாடலில், தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், கொழும்பு பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், அரசாங்க பரிசோதகர், பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் தலைமை அதிகாரி மற்றும் மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்..

தீ விபத்திற்கான காரணங்கள் மற்றும் இந்தப் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் குடியிருப்பாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் அடுத்த 07 நாட்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் இந்த விசாரணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள சகல பாடசாலை மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் வழமை போன்று பாடசாலைக்குச் செல்லத் தேவையான பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கர்ப்பிணித் தாய்மாருக்கும் பெண்களுக்கும் சகல சுகாதார வசதிகளையும், சமைத்த உணவுகளையும் தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தற்காலிக தங்குமிடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கஜிமாவத்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை

- ஒன்றரை வருடத்திற்குள் மூன்று முறை தீப்பிடிப்பு
- சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் 2015 க்குப் பிறகு குடியேறினர்
- 2 - 3 வீடுகளை கொள்வனவு செய்தோரும் உள்ளனர

மோதர, மாதம்பிட்டிய, கஜீமா தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பு மாவட்ட ஆளுநர் தலைமையில் குழுவொன்றை நியமித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று (28) நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தோட்ட வீடுகள் தொடர்ச்சியாக தீப்பிடித்து வருவதாகவும் கடந்த ஒன்றரை வருடங்களில் மூன்று தடவைகள் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்றறது.

அங்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன தெரிவிக்கையில்,
இந்த தோட்டங்கள் தொடர்ந்து தீயில் சிக்கி வருகின்றன. கடந்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை தீப்பிடித்தது. எனவே இந்தத் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணை நடத்துவோம். அந்த அறிக்கை கிடைத்த பிறகு முறையான திட்டத்தை செயல்படுத்துவோம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில்,

இந்த வீடுகள் கடந்த வருடமும் எரிக்கப்பட்டன. சில நேரங்களில் இவை தீப்பிடித்து எரிகின்றன. தற்காலிகக் குடியிருப்பாளர்களை அங்கிருந்து அகற்ற முடியுமா?

அங்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியதாவது,
இந்தத் தோட்டத்தில் வசிப்பவர்களிடம் வீடுகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காண்போம். இவர்களில் சிலர் பதுளையில் குடியேறியவர்கள். அவ்வாறானவர்களுக்கு அந்தப் பிரதேசங்களில் வீடுகளை வழங்குவோம். இல்லையெனில் இது பெரிய பிரச்சினையாகி விடும். அரசு பணத்தில் வீடுகளைக் கட்ட முடியாது. இந்த தீ விபத்து குறித்து முறையான பாரபட்சமற்ற விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்வோம்.

கொழும்பு மாவட்ட ஆளுனர் பிரதீப் யசரத்ன இங்கு கூறியதாவது,
மோதர, கஜீமா தோட்டத்தில் உள்ள வீடுகளில் வரிசையாக தீ பரவியமை தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது அதன் இடைநிலை முகாமாக நகர அபிவிரத்தி அதிகார சபை இயங்கி வருகின்றது.

இந்த தோட்டத்தில் தற்போது 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் பெரும்பாலானோர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். எனினும் இந்தத் தீயினால் 60 வீடுகள் முழுமையாகவும் 11 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 306 பேர் தீயினால் இடம் பெயர்ந்துள்ளனர்.

தற்போது இடம்பெயர்ந்த அனைவரும் மோதர உயன சன சமூக மண்டபம் மற்றும் களனி நதி ஆலயத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கம் உணவு மற்றும் பானங்களை வழங்குவதுடன், சர்வோதய நிறுவனத்தின் தலையீட்டுடன், இடம் பெயர்ந்த குழந்தைகளுக்கும் பள்ளி உடைகள், காலணிகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.

கஜீமா தோட்டத்திற்குப் பொறுப்பான கிராம அதிகாரி பிரதீப் பெரேரா,
கடந்த ஒன்றரை வருடத்தில் மூன்றாவது முறையாக இந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 2021 இல் 27 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள். தற்போது அதன் இடைநிலை முகாமாக நகர அபிவிருத்தி அதிகார சபை இயங்கி வருகின்றது. இந்தத் தோட்டத்தில் வசிக்கும் சிலர் அரசிடமிருந்து இரண்டு, மூன்று நிரந்தர வீடுகளைப் பெற்றாலும் அவர்கள் இன்னமும் அத்தோட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத் தோட்டத்தில் 160 வீடுகள் இருந்தன. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீடடால் சுமார் 60 வீடுகள் அகற்றப்பட்டது. ஆனால் கடந்த கொரோனா காலத்தில் இந்தத் தோட்டத்தில் அனுமதியின்றி நிர்மாணப் பணிகள் அதிகரிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்,
2007/2008 ஆம் ஆண்டு தெமட்டகொட வீடமைப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட போது அந்தப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் தற்காலிகமாக கஜீமா தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை இந்தக் காணியை இடைநிலை முகாமாகப் பயன்படுத்தி வருகின்றது. இந்தக் குடியிருப்பாளர்கள அனைவருக்கும் 2014 இல் வீடுகள் வழங்கப்பட்டு இந்த நிலம் முழுமையாக விடுவிக்கப்பட்டது. தற்போது தற்காலிக முகாம்கள் தேவையில்லை. தேவைப்படும் போது மக்களை நிறுத்த போதுமான வீடுகள் உள்ளன. முன்பு வீடு கொடுத்தவர்களின் பட்டியல் உள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இங்கு 20 குடும்பங்கள் மட்டுமே குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 200 குடும்பங்கள் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்கள் எனவும் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு அனுமதியற்றவர்கள் குடியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வீடுகள் அனைத்துக்கும் நகர சபையினால் மதிப்பீட்டு எண்களைக் (வரிப் பணம் இலக்கம்) கொடுத்து நீர் மற்றும் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளது. மேலும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இது போன்ற தோட்ட வீடுகள் உள்ளன. ஆனால் கஜீமா தோட்டத்தில் மட்டும் தொடர்ந்து தீப்பிடித்து வருகின்றது. கொழும்பு மாவட்டத்தில் 68000 குடிசை வீடுகளுக்கு வீடுகள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இப்படி வீடுகள் கொடுக்கப் போனால் குறைந்தது இரண்டு இலட்சம் வீடுகளாவது கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் நாம் இலக்கை அடைய முடியாது. நகர அபிவிருத்தி அதிகார சபையும் நஷ்டமடையும் நிறுவனமாக மாறும்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, சரத் வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, யாதாமினி குணவர்தன, மதுர விதானகே, ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்துகொட, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...