ஆர்ப்பாட்டம் நடத்துவதில் பிரச்சினை இல்லை; 6 மணி நேரத்திற்கு முன் அறிவிக்க வேண்டும்

- ஒலி பெருக்கி பயன்படுத்தவே பொலிஸ் அனுமதி வேண்டும்
- தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே உயர் பாதுகாப்பு வலய பிரகடனம்

ஆர்ப்பாட்டங்களை நடாத்த குறைந்தபட்சம் 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி அனுமதி பெற வேண்டுமென பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரமித பண்டார இதனைத் தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை எனவும், அரசாங்கம் அதனை ஏற்பதாகவும் தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டில் ஸ்திரமான சூழல் உருவாகி வருகின்ற நிலையில் போராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு விளைவித்தால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதன் போது தெரிவித்தார்.

அத்துடன், தேவையேற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகளும் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

ஆர்ப்பாட்டம் நடாத்தலாம், உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம், கூட்டங்களை நடத்தலாம். ஆனால் சட்ட முறைப்படி அந்த கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.

கிராமத்தில் கூட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அந்தந்த பொலிஸ் நிலையங்களில் எழுத்து மூல அனுமதி பெற வேண்டும். அன்றாட வாழ்க்கையை துன்பகரமானதாக மாற்றும் விடயங்களை எல்லோரும் விரும்புவதில்லை. எனவே, அதையெல்லாம் பரிசீலித்தே பொலிசார் அந்த அனுமதியை வழங்குவதாக, அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறில்லாவிடின், திடீர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல எனவும், காலங்காலமாக வரும் ஒரு சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் விடயங்களாகும் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அரச அதிகாரிகள் தங்கள் பணிகளை முன்னெடுக்க அது தடையாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஆட்சி குறித்து முடிவு எடுக்கும் இடத்தில், இவ்வாறான இடையூறுகள் ஏற்பட்டால் அவ்வாறான இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னர் ஏற்பட்ட நிலை மீண்டும் ஏற்பட இடமளிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தரும்போது, ​​அங்குள்ள தூதுவர்களுடன் ஜனாதிபதி அங்கு வைத்தே கலந்துரையாடல்களை மேற்கொண்டார். அவர்களால் அங்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், கொழும்புக்கு வரும்போது மிகவும் குழப்பமான, பிரச்சினையான சூழல் இருப்பது போன்றே அவர்கள் காண்பார்கள். இவ்வாறான நிலையில் நாடு முன்னேற்றமடைய அவர்களின் ஆதரவு பெரும் தடையாக இருக்கும். அதனாலேயே பாரிய கொழும்பு நகரில் ஒரு சில இடங்களை மாத்திரம் உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...