கடையொன்றின் அருகில் கைவிடப்பட்ட சிசு மீட்பு

- சந்தேகத்தின் பேரில் குறித்த பிரதேசத்தில் திருமணமாகாத பெண் கைது

நுவெரெலியாக, வட்டகொட, யொக்ஸ்போர்ட் பிரதேசத்திலுள்ள  கடையொன்றின்  அருகாமையில் சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிசு பிறந்து சிறிது நேரத்திலேயே அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று (24) அதிகாலை 4.00 மணியளவில் குழந்தை அழும் சத்தம் மற்றும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அருகிலிருந்த  கடையிலிருந்த ஒருவர் வந்து பார்த்தபோது சிசு ஒன்று  தரையில் கிடந்தது தெரியவந்தது. அதன்பின், அப்பகுதி மக்கள் குழந்தையை அருகிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளித்துள்ளனர்.

பின்னர் இது குறித்து 119 அவசர சேவை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நடவடிக்கை எடுத்தனர்.

சிசுவை மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிசு தற்போது நலமுடன் இருப்பதாக நுவரெலியா பொது வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத பெண் ஒருவரை கைது செய்ததாகவும், கைது செய்யப்படும் போது பெண்ணுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டதால் குறித்த பெண் லிந்ததுலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தலவாக்கலை  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...