உலக பொருளாதாரம், பாதுகாப்பை SCO மாநாட்டில் முன்னிலைப்படுத்திய நரேந்திர மோடி

உஸ்பெக்கிஸ்தானின் சமர்கண்ட் நகரில் சிறப்பாக நடந்தேறிய ஷங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாடு (Shanghai Cooperation Organisation-(SCO)

ஷங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் (Shanghai Cooperation Organisation - SCO) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். உஸ்பெக்கிஸ்தானில் கடந்த15ஆம், 16ஆம் திகதிகளில் இம்மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெகிஸ்தான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. ரஷ்ய_உக்ரைன் போருக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொண்ட முக்கியமான முதல் மாநாடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய கூட்டமைப்பு ஆகும். ஐரோப்பா, -ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு இதுவாகும். மக்கள் தொகை அடிப்படையில் இதுதான் உலகிலேயே பெரிய கூட்டமைப்பாகக் கருதப்படுகிறது. உலகின் 60 சதவீத மக்கள் தொகையினர் இந்த கூட்டமைப்பின் கீழ் வருகிறார்கள். அதேபோல் உலகின் 60 சதவீத நிலப்பரப்பு இந்த கூட்டமைப்பின் கீழ் வருகிறது. உலகின் 30 சதவீத ஜி.டி.பி இந்த கூட்டமைப்பின் கீழேயே வருகிறது.

இந்த அமைப்பில் இந்தியா முக்கியமான உறுப்பு நாடு ஆகும். சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் ஆகியவை இந்த கூட்டமைப்பில் இருக்கும் முக்கியமான உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020_- 2021 காலகட்டத்தில் சீனாவுக்கும் - இந்தியாவுக்கும் இடையே கடும் எல்லைப் பிரச்சினை நிலவியது. அப்போது இந்த SCO மாநாடு பிரச்சினையின் தீவிரத்தைத் தணிப்பதில் முக்கிய காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி இந்த மாநாட்டில் உரையாற்றினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பிரதமர் மோடி தனியாக சந்தித்தும் பேச்சு நடத்தியுள்ளார்.

கடந்த 2001- ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரும் இம்மாநாட்டில் நேரில் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி "உலகம் கொவிட்-19 தொற்றை முறியடித்து வருகிறது. கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்_ - ரஷ்யா இடையேயான போரால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இன்று இந்திய நாட்டில் 70,000 இற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகார்ன்கள் உள்ளன" என்று குறிப்பிட்டார்.

2020 இடம்பெற்ற கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, முதன் முறையாக சீன ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதே போல உக்ரைன்_ - ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நிகழ்வுக்கு பின்பு, முதல் முறையாக சீன ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

கொரோனா காலத்தில் இந்த மாநாடு ஒன்லைனில் மட்டுமே நடந்து வந்தது. முதன்முறையாக கொரோனாவிற்கு பின்பாக இந்த மாநாடு நேரடியாக நடந்துள்ளது. பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் பற்றி பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். சர்வதேச தீவிரவாதம், எல்லை தாண்டிய தீவிரவாதம் பற்றியும் அவர் பிரஸ்தாபித்துள்ளார். நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்விதமிருக்க இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். உலகம் ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாக இதன் போது அவர் எடுத்துரைத்துள்ளார்.

பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட வர்த்தக இணைப்பு மற்றும் கலாசாரம் என்பன முக்கியமானவை என ஜெய்சங்கர் குறிப்பிட்டார். பிராந்திய ஒத்துழைப்பு மூலம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் இதன் போது மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.


Add new comment

Or log in with...