- பரிந்துரைகளை சமர்ப்பிக்க விஜயதாஸ தலைமையில் அமைச்சரவை உபகுழு
இலங்கையில் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமொன்றை அமைப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சு உபகுழுவை நியமிப்பதற்கான வெகுஜன ஊடக அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்றைய (22) அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் குறித்த குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் புதிய ஊடகங்களில் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்தல்களுக்காக தற்போது அடிப்படைச் சட்டமொன்று இல்லாதமையால், அவ்வாறான ஊடகங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போதும், குறித்த ஊடகங்கள் வாயிலாக செவிப்புல கட்புல உள்ளடக்கங்களை ஒளி/ஒலிபரப்பும் போது ஒருசில வேளைகளில் பலதரப்பட்டவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், ஒருசில ஊடகங்கள் தார்மீகமற்ற முறையில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வுக் கருத்துக்கள் உருவாகும் வகையில் நடந்து கொள்வதாலும் அண்மைக் காலங்களில் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை உயர்வாகப் பாதுகாத்து தொழிநுட்ப ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தற்போது ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களையும் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறும் ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும், மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஒழுக்கநெறிக் கோவையை அறிமுகப்படுத்தக் கூடிய வகையில் புதிய ஒளி/ ஒலிபரப்பு சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, அதற்குப் பொருத்தமான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
Add new comment