வடக்கு, கிழக்கு எம்பிமாருக்கு தெளிவுபடுத்தவுள்ள நீதியமைச்சர்

வடக்கு, - கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது, போர்க்குற்றம் தொடர்பில் வெளியக விசாரணைகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கேள்வி எழுப்பப்பட்டது. "கடந்த 2015 செப்டெ ம்பரில்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன், 33/1 என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதில், சர்வதேச நாடுகளில் நீதிபதிகளால் விசாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் இலங்கையின் கோரிக்கைக்கு அமைய அது பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் நீதிபதிகள் என்றவாறு மாற்றப்பட்டிருந்தது.

இம்முறை வெளிவிவகார அமைச்சருடன் அப்போதைய மற்றும் தற்போதைய நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷவும் ஜெனீவா சென்றிருந்தார். அமர்வின்போது அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியக பொறிமுறை அரசியலமைப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு அரசியமைப்புக்கு உட்பட்டிருந்த இந்த விடயம், தற்போது அரசியலமைப்பு முரணானது எப்படி என்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் கொண்டிருக்கும் அக்கறையை தாமும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

எனினும், மாறிவந்த அரசாங்கங்கள் காரணமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து எதிர்வரும் வாரங்களில் வடக்கு, கிழக்கில் நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...