நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் செயற்பட அழைப்பு

அரச, தனியார் ஊடகங்களிடம் அமைச்சர் பந்துல கோரிக்கை

நாட்டின் வருமானத்தில் 86 வீத நிதி அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுவதாகவும் இத்தகைய சூழ்நிலையில் உண்மையான நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு முக்கியமானதென்றும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  ஒருபோதும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை அரசாங்கம் நிறுத்தாதென தெரிவித்த அமைச்சர் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பெற்றே தற்போது சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வருமானத்தை விட செலவு அதிகமானால் எந்த நிறுவனமோ வீடோ கடன் பெறுவதை தவிர்க்க முடியாதென்பதை குறிப்பிட்ட அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்திடம் 16 முறை அரசாங்கங்கள் கடன் பெற்றுள்ளதாகவும் கடந்த அரசாங்கமும் 1.6 பில்லியன் டொலரைக் கடனாக பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்தச் சட்டம் மூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

அரசாங்கத்தின் வரி வருமானம் 1268 பில்லியனாக உள்ளபோது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு 1115 பில்லியன் செலவிடப்படுகிறது. இந்த மீதி பணத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு கடன் செலுத்துவது, எவ்வாறு எரிபொருளை பெற்றுக் கொள்வது, எவ்வாறு நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது இந்த நிலையில் சர்வ கட்சி வேலைத்திட்டம் தற்போது அவசியமாகிறது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கடன் பற்றுப் பத்திரம் விநியோகிக்க வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் எமது வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிக்க வேண்டியுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பொருத்தவரையில் மிகவும் கஷ்டப்பட்டு அதனை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நான் பதவியேற்ற நாள் முதல் இதுவரை எவரையும் அங்கு எந்தப் பதவிக்கும் நியமிக்கவில்லை.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...