மக்களை ஏமாற்றும் வியாபாரத் தந்திரம்!

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்காக உயர்ந்து விட்டன. அரிசி உட்பட்ட தானியங்கள், உபஉணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள் போன்ற அனைத்து உணவுப் பொருட்களுக்குமே விலைகள் கடுமையாக அதிகரித்து விட்டன. உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனரென்பதை மறுப்பதற்கில்லை.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியே இதற்கான காரணமாகும். அதேவேளை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கான காரணிகளும் பலவாகும். இலங்கையில் வருடக்கணக்கில் கொவிட் தொற்று தாக்கம் நிலவியது. கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அத்தொற்றினால் பீடிக்கப்பட்ட மக்களைக் குணப்படுத்துவதற்குமென அரசாங்கம் பெருந்தொகை நிதியைச் செலவிட்டது.

அவ்வேளையில் கொவிட் தடுப்பு நடவடிக்ைகக்கான செலவினங்கள் பற்றி அரசாங்கம் பொருட்படுத்தியதில்லை. மக்களின் பாதுகாப்பு மட்டுமே பிரதானம் என்ற உறுதிப்பாட்டிலேயே அரசாங்கம் கொவிட் தடுப்பு நடவடிக்ைகக்காக பெருந்தொகை நிதியைச் செலவிட்டது. நீண்ட கால முடக்கத்தினால் வருமானம் இழந்திருந்த மக்களுக்கு பணஉதவி வழங்குவதற்காக அரசு செலவிட்ட நிதி ஏராளம். அத்துடன் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கு உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்ைகயும் அரசினால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி உருவாகுவதற்கான பிரதான காரணி இதுவேயாகும். அத்துடன் கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறையும் முடங்கிக் கொண்டதனால் நாட்டுக்கான அந்நிய செலாவணி வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் கடந்த அரசாங்க காலத்தில் தவறான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணமென்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை மாத்திரமன்றி அன்றாட பாவனைப் பொருட்கள் அனைத்தினதும் விலையும் உயர்ந்து விட்டது. பொருட்களின் விலையேற்றத்துக்கு நியாயமான காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், வியாபாரிகளில் பலர் கொள்ளை இலாபம் கருதி தங்களது சுயவிருப்பத்தின்படி பொருட்களின் விலைகளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறி உட்பட பல்வேறு பொருட்களின் விலையேற்றத்துக்கு வியாபாரிகளே காரணமெனக் கூறப்படுகின்றது. மலையகப் பகுதியிலுள்ள தோட்டங்களில் விளைகின்ற மரக்கறிகளை செய்கையாளர்களிடமிருந்து மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்கின்ற வியாபாரிகள், அம்மரக்கறி வகைகளை கொழும்பு மற்றும் நகர்ப்பகுதிகளுக்குக் கொண்டு வந்து அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக செய்கையாளர்களுக்கு மிகக் குறைவான வருமானமே கிடைக்கின்றது. அவர்கள் வறுமையிலேயே வாழ்கின்றனர். ஆனால் மரக்கறிகளை கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற வியாபாரிகளோ அதிக இலாபமீட்டி வருகின்றனர். அதிக விலை கொடுத்து மரக்கறி வகைகளை வாங்குகின்ற மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். மரக்கறி வகைகளின் விலைகளை சரிவு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இத்தகைய வியாபாரிகள் ஒருபோதுமே இடமளிப்பதில்லை என்பதுதான் உண்மையாகும்.

மரக்கறி வகைகளுக்கு மாத்திரமன்றி பல்வேறான உணவுப் பொருட்களின் விலையேற்றத்துக்கு வியாபாரிகளே காரணமாக உள்ளதாக தெரியவருகின்றது. அதாவது வியாபாரிகளில் பலர் தாங்கள் நினைத்தவாறு பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். நுகர்வோருக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளையிட்டு வியாபாரிகளில் பலர் ஒருபோதுமே அக்கறை கொள்வதில்லை. பொருளாதார நெருக்கடி வேளையைப் பயன்படுத்தி அதிக இலாபமீட்டுவதிலேயே வியாபாரிகளில் பலர் கண்ணுங்கருத்துமாக உள்ளனர்.

உணவுப் பொருட்களின் விலையுயர்வுக்கு பொருளாதார நெருக்கடி மாத்திரம் காரணமல்ல, வியாபாரிகள் பலரின் சுயநலன்மிக்க செயற்பாடுகளுமே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான முறைகேடுகளுக்கு தொடர்ந்தும் இடமளிப்பது முறையல்ல. அவ்வாறு இடமளித்தால் உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முடியாத காரியமாகி விடலாம். இவ்விடயத்தில் அரசாங்கம் கடுமையான நடவடிக்ைககளை மேற்கொள்வது அவசியமென்றே மக்கள் கருதுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை காரணமாகக் கூறியவாறு நாம் எந்நாளும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. பொருளாதார நெருக்கடியைச் சாதகமாகப் பயன்படுத்தியபடி கொள்ளை இலாபமீட்டுகின்ற வியாபாரிகள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகும். உணவுத் தயாரிப்புக்கான பொருட்களுக்கு விலைகள் அதிகரிக்கின்ற போது உற்பத்திப் பொருட்களின் விலைகளை வியாபாரிகள் அதிகரிக்கின்றனர். ஆனால் உணவுத் தயாரிப்புக்கான பொருட்களின் விலைகள் குறைவடைகின்ற போது உணவு உற்பத்திப் பொருட்களின் விலைகளை அவர்கள் குறைப்பதில்லை.

இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துவது அவசியம். பொதுமக்கள் பாதிக்கப்படாத விதத்தில் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.


Add new comment

Or log in with...