சமஷ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வையே எதிர்ப்பார்க்கிறோம்

இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே  - எம்.ஏ.சுமந்திரன் 

சமஷ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளதென தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் காலையிலிருந்து மாலை வரை வவுனியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எமது மக்களை பாதிக்கும் பல விடயங்கள் தீர்க்கமாக கலந்து ஆலோசிக்கப்பட்டன. விசேடமாக நிலங்கள் அபகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகாவலி, தொல்லியல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு என்று வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையிலும், வேறு விதமாகவும் நிலங்களுக்கு ஏற்பட இருக்கின்ற ஆபத்துக்களை ஆராய்ந்தோம்.   திருகோணமலையில் தற்போது ஏற்பட்டுள்ள சவால் குறித்து பேசினோம். குறிப்பாக திருக்கோணேஸ்வரத்துக்கு சொந்தமான மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து ஆராயப்பட்டது.

ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் கால இழுத்தடிப்பு ஒன்றை செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவது உள்ளடங்களாக அதிகார பகிர்வு முறை செய்யப்பட வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே 13ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. ஆகவே அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு. முதல் படியாக 13வது திருத்தத்தை அமுல்படுவத்துவதாக இருந்தாலும் அதனை செய்யட்டும். ஆனால் அது தீர்வல்ல. அரசியல் தீர்வில் சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது. 

ஐ.நாவில் நிறைவேற்றப்பட போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் அதனை நிறைவேற்றப் போகிறவர்கள் இணை அணுசரணை நாடுகள். அவர்கள தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படி செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள். ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைவு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைபாக உள்ளது.

வவுனியா விசேட நிருபர் 


Add new comment

Or log in with...