இருதரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இந்தியாவின் மூலோபாய பங்காளியாக அமெரிக்கா

 - வெளிவிவகாரப் பேச்சாளர் அரிந்தம் பக்‌ஷி

எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைக் கட்டுப்படுத்தல் மற்றும் G20 அமைப்பு குறித்த விடயங்கள் போன்ற முக்கிய விவகாரங்களில் தொடர்ந்தும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படப்போவதாக இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொண்டுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க திறைசேரியின் பிரதிச் செயலாளர் வல்லி அடேயேமோஅண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

இது தொடர்பில் செய்தியாளர் மாநாடொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர் அரிந்தம் பக்‌ஷி, 'அமெரிக்க திறைசேரியின் பிரதிச் செயலாளர் இந்தியாவுக்கு மேற்கொண்ட இவ்விஜயத்தின் போது சில முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. எரிசக்தி பாதுகாப்பு, உலகலாவிய உணவு பற்றாக்குறை, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைக் கட்டுப்படுத்தல்,  காலநிலை நிதி, எரிசக்தி வர்த்தகம் மற்றும் ஜி 20 அமைப்பு தொடர்பான விடயங்கள் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். இவை இரு நாடுகளுக்கும் முன்னுரிமையான அம்சங்கள். அதனால் அவை குறித்து இச்சமயம் விரிவாகக் கருத்து பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது தொடரான ஈடுபாட்டின் ஒரு பகுதிக் கலந்துரையாடல் இது.

இரு தரப்பு, பிராந்திய மற்றும்  உலகலாவிய விவகாரங்களில் இந்தியாவின் மூலோபாயப் பங்காளியாக அமெரிக்காவை நாம் நோக்கிறோம். அதனால் இவ்விவகாரங்களில் அமெரிக்காவுடன் தொடர்ந்தும் ஈடுபடுவோம்'  என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அமெரிக்க திறைசேரி துணைச் செயலாளர், இந்திய விஜயத்தின் போது பம்பாயில் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் சங்கத்தில் மாணவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றிய  போது, அமெரிக்க - இந்திய பொருளாதார நட்புறவு குறித்தும் ஆழமான பொருளாதார உறவின் மூலம் இரு நாடுகளும் அடைந்து கொள்ளக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும் எடுத்து கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்களையும் அமெரிக்க திறைசேரியின் பிரதிச் செயலாளர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


Add new comment

Or log in with...