சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சி; பேசாலையில் 8 பேர் கைது

​​சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 08 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (13) மன்னார், பேசாலை, குடியிருப்பு கடற்கரையில் வைத்து இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது ​​சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரையில் தங்கியிருந்த குழுவினரை சோதனைக்குட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொறவெவ, வவுனியா, யாழ்ப்பாணம், பேதுருமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 18 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 பேர் உட்பட 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற படகுகளை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேற முயற்சித்து, உயிரை பணயம் வைத்து, சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Add new comment

Or log in with...