83, 55 வயது தாய், மகள் கொலை; 62 வயது மற்றுமொரு மகள் வைத்தியசாலையில்

இன்று (10) காலை பதுளை, ஹிங்குருகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 83 வயதான தாய் அவரது 55 வயதான மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள க்ளன்பீல்வத்த - காந்தன்லயம் எனும் தோட்டத்திலுள்ள தோட்ட வீடொன்றில், கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 83 வயதான பெண்ணின் 62 வயதான மற்றுமொரு மகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஒரே வீட்டில் தனியாக வாழ்ந்த தாயான எச்.எம். ரன்மெணிக (83), மகள் ஆர்.எம். ஜயவதி (55) ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், ஆர்.எம். மிசினோனா (62) எனும் பெண் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் 119 அவசர சேவை இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதோடு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் இன்று காலை 6.00 மணியளவில் பக்கத்து வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதை அடுத்து, பிரதேசவாசிகள் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் அவசரப் பிரிவு இது குறித்து பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் படுகாயமடைந்த பெண்ணை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேற்படி வீட்டை சோதனையிட்ட பொலிஸார் ஒரு படுக்கையறையின் கட்டிலில் கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் சடலங்களை அவதானித்துள்ளனர்.

அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்த முகமூடி அணிந்த நபர்கள், மூவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலங்கள் தொடர்பான மரண விசாரணை பதுளை நீதவானினால் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...