கவனயீனமான வாகன செலுத்துகை; வேன் - 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி 3 பேர் பலி

- மேலும் 2 பேர் காயம்; வேனின் சாரதி கைது

வேன் ஒன்று 3 மோட்டார் சைக்கிள்கள்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (09) கொழும்பு - கண்டி பிரதான வீதியில், கேகாலை, ரங்வல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து கேகாலை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வேன், கொழும்பு திசையில் இருந்து கண்டி திசை நோக்கி வலது பக்கம் சார்ந்து வீதியில் பயணித்துள்ளதோடு, கேகாலை திசையில் இருந்து கொழும்பு திசை நோக்கி வீதியில் தமக்குரிய பக்கத்தில் பயணித்த 3 மோட்டார் சைக்கிள்களுடன் குறித்த வேன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 3 சைக்கிள்களையும் ஓட்டிச் சென்ற அதன் சாரதிகள் மற்றும் அதில் பின்புறமாக பயணித்த 2 பேர் ஆகிய ஐவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இருவர் மற்றும் பின்புறமாக பயணித்த ஒருவர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மரணித்த மூன்று பேரும் 27 வயதானவர்கள் என்பதோடு இவர்கள் துல்கிரிய மற்றும் வியாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தானது, வேன் சாரதியின் பாதுகாப்பற்ற மற்றும் கவனயீனமான வாகன செலுத்துகை காரணமாக இடம்பெற்றுள்ளது என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணித்தவர்களின் சடலங்கள் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு கேகாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...