எதிர்க்கட்சி 2ஆம் வகுப்பு அரசியல் செய்கிறது

சபையில் மஹிந்தானந்த அலுத்கமகே எம்பி

மந்தபோசணை  வேலைத் திட்டத்திற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்கி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் 50பில்லியன் நிதியில் அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் மஹிந்தானந்த அலுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள  மந்தபோசனம் தொடர்பான  பிரேரணையை நாம் வரவேற்கின்றோம் எனினும் எதிர்க்கட்சி அதனை கொண்டு வந்த நோக்கம் தவறானது என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி எப்போதும் இரண்டாம் வகுப்பு அரசியல் செய்யவே முயற்சிக்கிறது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம். பி  ரோஹிணி கவிரத்ன முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மந்தபோசனம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அதனை எதிர்க்கட்சி அரசியல் நோக்கத்தில் பார்க்காமல் அதற்காக என்ன செய்யலாம் என்பது தொடர்பிலேயே யோசனை முன் வைக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய கணிப்பீட்டில் 113நாடுகளில்  77வது இடத்தில் இலங்கை உள்ளது.

கொரோனா வைரஸ் சூழ்நிலை, உக்ரேன் யுத்தம், கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகள் என பலவற்றை இதற்கு காரணமாக கூற முடியும்.

மந்த போசனத்தில் பெரிதும் பாதிக்கப்படும் பிரதேசமாக நுவரெலியா மாவட்டத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தையும் குறிப்பிட முடியும். அரசாங்கம் அது தொடர்பில் விசேட திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மந்தபோசனம் தொடர்பில் 50பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அத்துடன் உலக வங்கி 180மில்லியனையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 140மில்லியனையும் அதற்காக வழங்கியுள்ளது. சீன அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகை அரிசியை வழங்கியுள்ளது. அந்த வகையில் மந்த போசனம் தொடர்பில் தற்போதுள்ள நிலையில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறெனினும்  மந்தபோசனத்தில் இலங்கை ஆறாவது இடத்திற்கு வந்தமைக்கு கடந்த கால அரசாங்கங்களும் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...