மனஅழுத்தத்தை விரட்டியடிப்பதே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அத்திவாரம்

தற்காலத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்உள்ள பாரிய பிரச்சினை உளத்தாக்கம் ஆகும். உளத்தாக்கம்காரணமாக தொற்றாநோய்களான நீரிழிவு, உயர்குருதியமுக்கம், கொழுப்பு அதிகரிப்பு, இருதய பாதிப்புக்கள், உடல் பருமன் அதிகரித்தல், நித்திரையின்மை, மனநோய்கள் போன்ற பலவிதமான தாக்கங்கள்ஆதிக்கம் செலுத்துகின்றன.

எமது மனத்தை கசக்கிப் பிழிந்து, வாட்டி வதைத்து, எண்ணற்ற சுமைகளை ஏற்படுத்தினால் மென்மையான மனம் எப்படி அமைதியாக இருக்கும்? மனஅழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க கோபம், பயம், கவலை, சந்தேகம், வெறுப்பு, கவனக்குறைவு, ஆர்வமின்மை, ஊக்கமின்மை, சோம்பல், ஞாபகமறதி போன்ற வெளிப்பாடுகள் உண்டாகி எமது தினசரி வாழ்க்கை பாதிப்பு ஏற்படும். உலகளவில் பரந்து காணப்படும் நோய்களில் மனஅழுத்தம் பெரிய பங்கு வகிக்கிறது என உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. மனஅழுத்தமானது பாரிய உடல் உளபிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி, தற்கொலைக்கும் காரணமாகி விடலாம். எனவே உடல் ஆரோக்கியம் போன்றே உள ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  

முதலில் மனப்பாரம் குறைய மனம் விட்டு பேசுதல் வேண்டும். அதனை மற்றவர்கள் காது கொடுத்து கேட்பது மிகவும் ஆறுதல் தரக்கூடிய ஒரு விடயமாகும். அதேநேரத்தில் ஒருவரது தனிப்பட்ட பிரச்சினையை மற்றவர்களிடம் பகிர்ந்து தரமிறக்கக் கூடாது. மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். சிறிய பிரச்சினைகளையும் பெரிய பிரச்சினைகளாகக் கருதக் கூடாது.  

நாம் பார்க்கும் பார்வையில்தான் சகலதும் உள்ளது. நமது மனதை அமைதியாகவும், தெளிவாகவும் பேணிக் கொண்டு சகல விடயங்களையும் அணுக வேண்டும். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுயநலமின்றி சுயஒழுக்கத்துடனும், செய்தொழிலில் முழு ஈடுபாட்டுடனும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். சகல விடயங்களையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பதைக் கொண்டு வாழ்வில் திருப்தி காண வேண்டும். பொதுவாக இருப்பதைக் கொண்டு திருப்தி காணாது ஆடம்பரத்தை தேடியலையும் மனிதரில் மனநிம்மதி என்பது ஏற்படாது.  

அவ்வாறே நேர்மறையான எண்ணங்களுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்கள் நமது உடலையும், மனத்தையும் உற்சாகமாக வைத்திருக்கும் திறன் பெற்றவை. நேற்று நன்றாக இருந்தேன். இன்று நேற்றை விட நன்றாக இருக்கிறேன். நாளை இன்னும் நன்றாக இருப்பேன் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது முதுமொழி. சுவாமி விவேகானந்தர் கூட 'என்ன நடந்தாலும் அதை ஏற்றுக் கொள். இன்பம், துன்பம், எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்துவிடாதே' என்று கூறியுள்ளார். பாரதியார் கூட 'மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் ஒரு குழம்பிய கடலுக்கு சமமானது' என்பதுடன் 'மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும்... என்று கூறியுள்ளதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  

எதையும் வெல்லலாம் என்ற மனத்துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற எளிய யோகப்பயிற்சிகளை இயன்றளவு அதிகாலை மற்றும் இரவு படுக்கைக்கு போகமுன்னர் செய்ய பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றைக் கடைப்பிடிக்கும் போது வேறு எந்த புலன் பாதிப்புக்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.  

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்' என்பார்கள். கோபம் என்பது பெரிய நோய். கோபத்தால் செய்யத்தகாத விளைவுகள் இலகுவில் அரங்கேறி விடும். எனவே கோபத்தைக் குறைக்க அன்பு செய்ய பழக வேண்டும். அன்புடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அன்பு அதிகமிருந்தால் எதையும் இலகுவில் சாதிக்கலாம் என்ற மனத்துணிவு ஏற்படும்.  

ஆரோக்கியமான உடல் கிடைத்தமைக்கு நாம் இயற்கைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை என்றுமே வளர்க்கக் கூடாது. தாழ்வு மனப்பான்மையானது மனச்சோர்வை ஏற்படுத்தி விடும். அதனால் மனஅழுத்தம் ஏற்படும். அதனை தொடர்ந்து உடலிலுள்ள இரசாயன நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு விடும். அதனால் உடல்பாதிப்பு ஏற்படும்.  

தனிமை உணர்வை தவிர்க்க வேண்டும். அதே போல தனிமையில் இருப்பதையும் தவிர்த்து அவரவர் மனவிருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்கள் அல்லது பத்திரிகைகள் மற்றும் நகைச்சுவை துணுக்குகளை வாசித்தல், பஜனைப் பாடல்களை கேட்டலும் அவற்றை பாடுதலும், வானொலியில் பிடித்த விடயங்களை கிரகித்தல், தொலைக்காட்சியில் பிடித்த நிகழ்வுகளை இரசித்தல், படம் வரைதல், கவிதைகள எழுதுதல், நடனமாடுதல், பிடித்தமான சமையலில் ஈடுபடுதல், பூந்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் அமைத்தல், சிறார்களுடன் இணைந்து விளையாடுதல், தையல் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்தல், சுற்றுலா செல்லல், கடற்கரை, கோயில், மலைப்பிரதேசங்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களுக்குச் செல்லல், நண்பர்களுடன் அளவளாவுதல் தன்னலமற்ற சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனஅமைதியையும், புத்துணர்வையும் பெற்றுக்கொள்ளலாம்.  

அத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், வேகமாக நடத்தல், வீட்டிற்குள்ளே நடைப்பயிற்சி, விளையாடுதல் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.  

வளரும் பிள்ளைகளை அன்பாக அரவணைக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுக்காக தமது நேரத்தை ஒதுக்க வேண்டும். இரவு உணவு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உண்ண நேரம் ஒதுக்க வேண்டும். அந்நேரத்திலாவது குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை மட்டுமன்றி சகல விடயங்களையும் ஒளிவுமறைவு இன்றி கலந்தாலோசிக்க வேண்டும். தாய் எப்போதும் பெண் குழந்தைகளுக்கு தோழியாகவும் தந்தை ஆண்குழந்தைகளுக்கு தோழனாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகளை தாமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். பெற்றோர் தமது விருப்பங்களை பிள்ளைகளுக்கு திணித்து அவர்களை மனஅழுத்தங்களுக்கு தூண்டக் கூடாது.  

எதனை செய்யக் கூடாது என்கிறோமோ அதை செய்து பார்க்க முயலுவதுதான் கட்டிளம்பருவத்தின் இயல்பு. எனவே கட்டிளம் பருவத்து பிள்ளைகளை எமது கலாசார பழக்க வழக்கங்களுக்கேற்ப அதிக கட்டுப்பாடுகளை வரையறுத்து அவர்களின் சுதந்திரங்களை அளவுக்கு மீறி கட்டுப்படுத்தாமல் அவர்களை விட்டுப்பிடித்து நன்மை, தீமைகள் பற்றி தெளிவாக விளக்கி அவர்களுடன் மனம் விட்டுப்பேசி அவர்களை சமூகத்திற்கு ஏற்ற வகையில் மனத்துணிவுடன் கூடிய இளைஞர்களாக உருவாக்குவது பெற்றோரின் தலையாய கடமையாகும்.  

மேலும் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களும் அவர்களை சரியான முறையில் 'கல்வியின் நிறைவு ஒழுக்கம்' என்பதற்கிணங்க வழிநடத்த வேண்டும்.  

எல்லாவற்றுக்கும் மேலாக 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' எனும் முதுமொழிக்கு ஏற்ப தொலைபேசி பாவனையை இயன்றளவு குறைக்க வேண்டும். அதேபோலவே தொலைக்காட்சி, வானொலி போன்ற இலத்திரனியல் பாவனைகள் கூட அளவோடு இருக்க வேண்டுமே ஒழிய அவற்றிற்கு நாம் அடிமையாகி விடக்கூடாது.  

மனித வாழ்வில் இன்ன துன்பமும் மாற்ற முடியாதது. இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு விட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்து வாழக்கூடியவனே வாழ்க்கையை அனுபவிக்கின்றான். வாழ்வு என்பது ஒரு முறைதான். அதனை மகிழ்வுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கின்றோம்? ஏன நாமே நம்மை வதைத்து வாழ்வை வீணடிப்பதால் எதனை அடையப் போகின்றோம்?

வைத்திய கலாநிதி
செல்வி வினோதா சண்முகராஜா  

சிரேஷ்ட விரிவுரையாளர்,
சித்த மருத்துவ அலகு,  
கலாநிதி
திருமதி கௌரி ராஜ்குமார்  

சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்,  
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...