இலங்கையின் சிறுவர் இலக்கியத்துறையில் தலைசிறந்த படைப்பாளியாகத் திகழ்ந்தவர் அமரர் த. துரைசிங்கம்

- முதலாம் வருட நினைவு தினம் நேற்று

யாழ். புங்குடுதீவு பிரதேசம் கலை, இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் தந்திருக்கிறது. அவர்களில் துரைசிங்கமும் குறிப்பிடத்தகுந்த ஒருவர். அன்னார் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

நான் இலங்கையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் புங்குடுதீவிலிருந்து துரைசிங்கம் பத்திரிகைக்கு எழுதிக் கொண்டிருந்தார். தினமும் அவரது எழுத்துக்களை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்து வந்தது. அவரது எழுத்து இன்றும் மனக்கண்களில் தங்கியிருக்கிறது.

துரைசிங்கம் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயத்தில் முதலில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பணியாற்றியவர். அத்துடன் பகுதி நேரமாக பிரதேச செய்தியாளராகப் பணியாற்றினார்.

இன்றுள்ள நவீன தொடர்பூடக சாதனங்கள் இல்லாத அக்காலப்பகுதியில் பத்திரிகை அலுவலகங்கள் தபால் சேவையையே பெரிதும் நம்பியிருந்தன. உடனுக்குடன் செய்திகளை எழுதி, இரவு காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் தபால் ரயிலுக்கு சேர்ப்பித்துவிடும் சுறுசுறுப்பு யாழ். மாவட்ட நிருபர்களிடம் குடியிருந்தது. துரைசிங்கம் அவர்களின் எழுத்தை வைத்தே அவரது மென்மையான இயல்புகளை அன்றே புரிந்து கொண்டேன். இவரது சகோதரர்கள் நாவேந்தன், தமிழ்மாறன், இளங்கோவன் ஆகியோர் எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள். அதனால், அவர்களின் எழுத்துக்களில் அரசியல் நெடியும் மனித உரிமை சார்ந்த சிந்தனைகளும் பரவியிருக்கும்.

துரைசிங்கம் எப்பொழுதும் வருங்கால தலைமுறையினரான எமது குழந்தைகள் குறித்தே எழுதியும் பேசியும் வந்தவர். குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கு குழந்தைகளின் உளவியலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். தனது வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை குழந்தைகள், மாணவர்களுடன் செலவிட்டிருக்கும் துரைசிங்கம் அவர்களுக்காக எழுதினார்.

படைப்பு இலக்கியத்துறையில் மிகவும் சிரமமானது சிறுவர் இலக்கியம்தான். அதனை தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர் துரைசிங்கம்.

அதிர்ந்து பேசத் தெரியாத மென்மையான இயல்புகளைக்கொண்டிருந்தவர். இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்தான் இவரைச் சந்தித்தேன். ஒரு சில வார்த்தைகளுடனும் புன்சிரிப்புடனும் கடந்து சென்றார்.

அழகான கையெழுத்துக்கு சொந்தக்காரர். பத்திரிகைச் செய்தியில் இருந்து பின்னாளில் துரைசிங்கம் படிப்படியாக சிறுவர் இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த வேளையில் நான் புலம்பெயர்ந்து விட்டேன். அதன் பின்னர் அவரது கையெழுத்துகளை பார்க்கும் வாய்ப்புக் கிட்டாது போனாலும், இவர் எழுதிய நூல்கள் குறித்த செய்திகள் கிடைத்த வண்ணமிருந்தன.

'நல்ல நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம்' எனத் தொடங்கும் இவரது பாடல் இனிமையான சந்தத்துடன் தொடங்கி முடிகிறது. தமிழ் மாணவர்களுக்காக இவர் எழுதிய நூல்கள் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் உசாத்துணையாகும்.

க. பொ. த. (சாதாரண தர) மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியப்பாட பரீட்சைக்குத் தோற்றும் போது, அவர்களுக்கு பயன்தரக் கூடிய 'கங்கையில் விடுத்த ஓலை' என்ற நூலையும் எழுதினார். சிறுவர் கட்டுரைகள் , சைவநெறி , தமிழ் இலக்கியத் தொகுப்பு (வினா விடை), தமிழ் உரை நடைத் தொகுப்பு, தமிழ் செய்யுட் கோவை, தமிழ் மொழியும் இலக்கியமும் முதலான துறைகளில் சில பாகங்களையும் எழுதி மாணவர்களுக்கு வரவாக்கினார்.

நவராத்திரிப் பாமாலை, பாடம் புகட்டும் பழமொழிகள், பாட்டுப் பாடுவோம் என்றெல்லாம் பலவகை நூல்களை படைத்திருக்கும் துரைசிங்கம் அவர்கள் 'லெனினும் ஆசியாவும்' என்றொரு நூலும், Model Essays என்ற ஆங்கில நூலும் படைத்திருப்பவர்.

ஆசிரியர், அதிபர், கோட்டக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்விப் பணிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பன்னூலாசிரியர் என நன்கு அறியப்பட்டிருந்த துரைசிங்கம், சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய சாகித்திய விருதினையும் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் முதலானவற்றின் விருதுகளையும் பெற்றவர்.

இலக்கிய வித்தகர், கலாபூஷணம் முதலான பட்டங்களும் பெற்றவர். அவர் தனது 84 அகவையில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார்.

இலங்கையில் சிறுவர் இலக்கியத்திற்காகவும் மாணவர் சமுதாயத்திற்காகவும் தனது வாழ்நாட்களை அர்ப்பணித்த துரைசிங்கம் அவர்களின் படைப்புகளை நூலகம் ஆவணகத்தில் பெற்று படிக்கலாம்.

லெ. முருகபூபதி

அவுஸ்திரேலியா


Add new comment

Or log in with...