'ஈழத்தில் மாட்டு வண்டி சவாரியும் தமிழர் மரபும்'

சிட்னியில் நூல் வெளியீடு

தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், ஈழத்தின் பண்பாட்டு விழுமியங்களையும் பிரதிபலிக்கும் மாட்டுவண்டிச் சவாரி பற்றிய நூல் சிட்னியில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

சிட்னியின் மூத்த தமிழ் பேச்சாளர் தனபாலசிங்கம் இந்நூலை வெளியிட்டு உரையாற்றுகையில், "ஈழத் தமிழர்களது கலாசார மரபில் மாட்டு வண்டிச் சவாரி முக்கிய இடம்பெற்றுள்ளது. ஏறு தழுவுதல் தமிழ்நாட்டின் வீர விளையாட்டு என்றால் இலங்கைத் தமிழர்களின் வீர விளையாட்டாக மாட்டு வண்டிச் சவாரி அமைகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு. திருகோணமலை ஆக்கிய இடங்களிலும் மாட்டு வண்டிச் சவாரி காலம் காலமாக தொடர்வதை நாம் அவதானிக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைப் பேராசிரியர் பாலசுகுமார் எழுதிய 'ஈழத்தில் மாட்டு வண்டிச் சவாரியும் தமிழர் மரபும்' எனும் மேற்படி நூல் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், 40 வருடம் சுன்னாகத்தில் மருத்துவ சேவையாற்றியவருமான பிரபல வைத்தியர் ப. விக்கினேஸ்வராவின் நினைவு வணக்க நிகழ்வாக சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நூலை ராஜன் விக்கினேஸ்வரா வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை சிட்னி பிரபல்ய மருத்துவர் மனோமோகன் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு நிகழ்வில் சிட்னியின் மூத்த தமிழ்ப் பேச்சாளர் தனபாலசிங்கம் ஆய்வுரையாற்றினார்.

"காளை மாடுகளை அடக்கி வெற்றி கொள்ளல் தமிழர் பண்பாட்டில் தொடர்ந்து வருகின்ற ஒரு வீர விளையாட்டு. தமிழ்நாட்டில் அது பெரும் கொண்டாட்டமாக இன்று வரை தொடர்வதை நாம் காணலாம். காளை மாடுகள் தமிழ் மரபில் முக்கிய இடம் வகித்தமையையும் ஈழத் தமிழர்களது பண்பாட்டு வெளியில் காளை மாட்டுச் சவாரி முக்கிய இடம் வகித்தமையையும் நாம் காணலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாப்பது தாயக மக்களின் கடமை மாத்திரமன்றி, புலம்பெயர் தமிழர்களின் பெருங்கடமையுமாகும். ஈழத்தில் தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியம் மிக்க விளையாட்டுக்களில் ஒன்றாக மாட்டு வண்டிச் சவாரி விளங்குகின்றது. அது ஆரம்ப காலம் தொடக்கம் தற்காலம் வரையில் சிறந்ததொரு வீர விளையாட்டாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் இரசிக்கப்படும் விளையாட்டாகவும் காணப்படுகின்றது. இன்றைக்கு இந்த நூல் வெளிவருவதற்கு காரணம் மருத்துவர் விக்கினேஸ்வரா அவர்களாவார். அன்னார் வண்டிச் சவாரி மரபில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதை சுன்னாகம் பிரதேச சவாரிப் பிரியர்கள் தந்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா


Add new comment

Or log in with...