நகர அபிவிருத்தி அமைச்சின் பொதுமக்கள் தினத்தில் பிரச்சினையை கொண்டு வந்த வாசுதேவ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார நகர அபிவிருத்து மற்றும் வீடமைப்பு அமைச்சின் பொது மக்கள் தினத்தில் இன்றையதினம் (22) கலந்துகொண்டிருந்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக பொது மக்கள் தினம் முறையாக நடத்தப்படாத நிலையில் தற்போது இன்று முதல் மீண்டும் அது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கமைய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பொது மக்கள் தினம் இன்று (22) முதல் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்  கேட்போர் கூடத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி  மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள் அல்லது பொது முகாமையாளர்கள் இந்த பொது மக்கள் தினத்தில் பங்குபற்றுவதை அமைச்சர் கட்டாயமாக்கினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில்  இன்று நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பியும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளருமான வாசுதேவ நாணயக்காரவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

நுகேகொட பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையொன்றை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் பாராளுமன்ற  உறுப்பினர் வாசுதேவ முன்வைத்ததாகவும், குறித்த பிரச்சினைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சில நிமிடங்களிலேயே தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது மக்கள் தினத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு வாராந்தம் பதிலளித்து அந்த வாரத்தில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தார்.

மக்களை ஒருபோதும் அலைய வைக்கக் கூடாது என்று கூறிய அமைச்சர், அடுத்த பொது மக்கள் தினத்தில் குறித்த பிரச்சினை மீண்டும் முன்வைக்கப்படாமல் இருப்பதை அனைத்து அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டுமெனவும் கடுமையாக வலியுறுத்தினார்.


Add new comment

Or log in with...