சிறை செல்ல முன் தான் நடித்திருந்த திரைப்படத்தை பார்வையிட்ட ரஞ்சன் ராமநாயக்க

- விசேட அனுமதியின் அடிப்படையில் திரையரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்

திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க சிறை செல்ல முன்னர் கடைசியாக நடித்த The Game எனும் திரைப்படத்தை பார்வையிட சிறை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (19) பிற்பகல் கொழும்பு சிட்டி சென்டர் திரையரங்கில் திரையிடப்பட்ட விசேட காட்சியை பார்வையிட அவர், சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டதோடு, குறித்த காட்சி நிறைவடைந்ததும் மீண்டும் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்காக, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சின் விசேட அனுமதி கோரப்பட்டிருந்ததோடு, சிறைச்சாலையின் அனுமதியுடன் அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இலங்கையில் திரைப்பட நடிகர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் திரைப்படத்தை பார்வையிட அழைத்து வரப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், சிறைக்கைதி ஒருவர் விசேட சந்தர்ப்பங்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் சிறையிலிருந்து வெளியில் அழைத்துச்  செல்லப்படுவது இது முதல் தடவையல்ல என, சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2 வழக்குகளில் ஒன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 2ஆவது வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...