வீசா இரத்துச் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான பிரித்தானிய யுவதியை தேடி விசாரணை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், குடிவரவுச் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக இந்நாட்டில் தங்கியுள்ள பிரித்தானிய, ஸ்கொட்லாந்து பிரஜையான கெய்லி பிரேசரைக் (Kayleigh Fraser) கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், தன்னை நாட்டிலிருந்து நாடு கடத்த வேண்டாமென கோரி அவரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுக்காமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் (16) தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு சட்டங்களை மீறியதன் காரணமாக நாட்டில் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட வீசாவை இரத்துச் செய்ய குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறு வீசா இரத்துச் செய்யப்பட்டுள்ள குறித்த பிரித்தானிய யுவதியை கண்டுபிடித்து அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் அவர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...