மரியன்னையின் விண்ணேற்புத் திருவிழா

நாம் கொண்டாடும் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா நீண்ட  பாரம்பரியத்தைக்கொண்டது.  மரியாளின் விண்ணேற்பைக் குறித்து தொடக்கத்தில் புனித ஜெர்மானுசும் தமஸ்கு நகர யோவானும்தான் பேசத் தொடங்கினார்கள். அவர்கள்தான் மரியாளின் விண்ணேற்பைக் குறித்து மறையுரை ஆற்றினார்கள். மரியாள் விண்ணகத்திற்கு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததால் கடவுள் அவருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடையாகும்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுடைய உடலும் அவனுடைய ஆன்மாவும் புனிதமானது. மாசற்றது (தொநூ 2: 1-7) அப்படிப்பட்டதை மனிதன் தன்னுடைய தவற்றால் தூய்மையற்றதாக மாசுள்ளதாக மாற்றிக்கொண்டான்.

எனவே பாவத்தின் சம்பளம் மரணம் (உரோ 5:12) என்பதைப் போன்று மரணமில்லா பெருவாழ்வைக் கொடையாகப் பெற்றிருந்த மனிதன் தான் செய்த பாவத்தினால் அக்கொடையை இழந்தான்; மரணத்தைத் தழுவினான். பாவக்கறையோடு இந்த மண்ணுலகத்தில் பிறந்தாலும்  கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தனால் மரணத்தைத் தழுவாமல் விண்ணகத்திற்கு இருவர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் வேறுயாருமல்ல ஏனோக்கும், இறைவாக்கினர் எலியாவுமே ஆவர் (தொநூ 5:24, 2அர 2:1).

ஏனோக்கு கடவுளோடு நடந்தார். அதனால் அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இறைவாக்கினர் எலியா கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராய் விளங்கினார். அதனால் அவரும் நெருப்புத் தேரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

மரியாளைக் குறித்து  பார்க்கும்போது அவர் கருவிலே பாவக்கறையில்லாமல் பிறந்தவர். ஆண்டவரின் தூதரால் ‘அருள்மிகப் பெற்றவளே’ என அழைக்கப்பட்டவர். (லூக் 1:28). அது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுவையே தன்னுடைய உதிரத்தில் தாங்கிடும் பேறுபெற்ற தாய்,

இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தாள். இத்தகைய பேற்றினால் மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் உறுதியாகச் சொல்லலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்” (யோவா 12:26). மரியா தலை சிறந்த சீடராக வாழ்ந்ததனால் அவர் இயேசுவுடன் விண்ணக வீட்டில் இருப்பார் என்பது உறுதி.

மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் வரலாறானது, மரியாள் தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார்.

அதுபோன்று ஒரு குறிப்பிட்ட நாளில் மரியாள் இறந்தார். அவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு. தோமாவைத் தவிர. எல்லா சீடர்களும் அங்கு வந்தார்கள். பின்பு அவர்கள் மரியாளைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். இதற்குள் மரியாளின் இறப்புச் செய்தி தோமாவின் காதுகளை எட்டியது. அவர் சீடர்களிடம் வந்து, “நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய எதையும் நம்பமாட்டேன்” என்று சொன்னார். உடனே சீடர்கள் தோமாவை, மரியாள் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு கல்லறையைத் திறந்து பார்த்தபோது, மரியாவின் உடல் இல்லாததைக் கண்டு அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பினார்கள்.

மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் அதன்படி வாழ்வோம்.

மரியன்னை)க்கு விழா எடுத்து அவரை மகிமைப்படுத்தும் நாம் நம்மோடு வாழும் நம் அன்னையருக்கும்  மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். ஏனென்றால் பல நேரங்களில் நாம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னையின் ஆலயங்களுக்குச் சென்று அவரை வழிபடுகிறோம். அவர் முன்பாக உருகி நிற்கின்றோம். ஆனால் நம் அன்னையரை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம்.

இது ஒருவிதத்தில் வெளிவேடம்தான். மரியன்னையின் மீது அன்பு வைத்திருக்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்கு தக்க உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளமுடியும்.

விண்ணேற்புப் பெருவிழாவில்  மரியன்னைக்கு மகிமை செலுத்துவோம், அதே நேரம் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

அருட்பணி
மரிய அந்தோனிராஜ்


Add new comment

Or log in with...