மருதமடு திருப்பதியின் ஆவணிப் பெருவிழா

மருதமடு திருப்பதியின் ஆவணித் திருவிழா நேற்று திங்கட்கிழமை சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை 6.30மணியளவில்  திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபர்ட் அந்த்ராடி ஆண்டகை மற்றும் கொழும்பு உயர்மறை மாவட்ட துணை ஆயர் பேரருட் திரு அன்ரன் ரஞ்சித் ஆண்டகை   ஆகியோர் மன்னார் மறை மாவட்ட ஆயருடன்  இணைந்து திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர்.

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடுமாதாவின் திருச் சுரூபபவனி இடம்பெற்றதோடு விசுவாசிகளுக்கு மது மாதாவின் திருச்சுருப  ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

கடந்த வருடம் நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருவிழா நிகழ்வுகளை விமரிசையாக நடத்துவதற்கு முடியாத நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட விசுவாசிகளே திருவிழாவில் கலந்து கொண்டனர். இம்முறை திரு விழாவில் வடக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் பெப்பி சூசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி. கிறிஸ்து நாயகம் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் பலரும் திருவிழா கூட்டுத் திருப்பலியில் பங்கேற்றனர்.

படங்கள், தகவல்:
மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...