சீன ஆராய்ச்சிக் கப்பல் 'Yuan Wang 5' அம்பாந்தோட்டை துறைமுகத்தில்

- ஓகஸ்ட் 22 வரை அம்பாந்தோட்டையில் தரித்து நிற்கும்
- வரவேற்க, சரத் வீரசேகர, வாசுதேவ, விமல், அத்துரலிய வருகை

சீன ஆராய்ச்சிக் கப்பல் 'Yuan Wang 5' அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று (16) முற்பகல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வரவேற்க, இலங்கையிலுள்ள சீன தூதுவர் Qi Zhenhong வருகை தந்திருந்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்டோர் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சு வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இக்கப்பல் இன்று வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பல் ஓகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இருந்த நிலையில், இது ஒரு உளவுக் கப்பல் என இந்தியாவினால் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இக்கப்பலின் இலங்கை விஜயத்தை ஒத்திவைக்குமாறு கடந்த 10ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு சீன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய, கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த யுவான் வாங்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் குறித்த கப்பல் இன்று (16) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்கு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியது.

உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறும் நோக்கில் எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை 'யுவான் வாங் 5' கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்பது குறிப்பித்தக்கது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...