டயஸ்போராக்களை சந்தித்துரையாட தயார்

அரசு ஏற்பாடு செய்து தருமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசினால், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக  திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையையும், 316 தனிநபர்களுக்குமான தடையையும் நீக்கியுள்ளமையை நான் வரவேற்கிறேன் என மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்திப்படுத்தப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளையும் நாம் நாட வேண்டும்.

இதற்காக கால தாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன்.

ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன்.

அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோசனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...