வங்கியிலுள்ள சேமிப்பை பெற பலரை சிறைவைத்தவர் சரண்

வங்கியில் உள்ள தமது சேமிப்பை மீளப்பெற அனுமதிக்குமாறு கோரி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் வங்கி ஒன்றில் ஆறு மணி நேரம் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி சாரணடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பெய்ரூட்டின் பரபரப்பான ஹம்ரா மாவட்டத்தில் உள்ள மத்திய வங்கிக்குள் கடந்த வியாழக்கிழமை கைத்துப்பாக்கி மற்றும் பெற்றோலுடன் நுழைந்த 42 வயதான பஸாம் அல் ஷெய்க் ஹுஸைன் என்ற ஆடவர், தமது பணத்தை பெறுவதற்கு அனுமதிக்காவிட்டால் தீக்குளிப்பதாக எச்சரித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு லெபனானில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்தது தொடக்கம் லெபனான் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள தமது சேமிப்புகளை பெற முடியாத வைப்பாளர்கள் உள்ளுர் வங்கிகளில் தமது கோபத்தை வெளிப்படுத்தும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தமது சேமிப்பில் ஒரு பகுதியை வழங்க வங்கி முன்வந்ததை ஹுஸைன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தாம் பிடித்து வைத்திருந்த ஆறு பணயக்கைதிகளை விடுவித்த அவர் பொலிஸாரிடம் சரணடைந்தார்.

இந்த ஆடவரின் செயல் பொதுமக்களின் ஆதரவை பெற்றதோடு, வங்கிக்கு வெளியில் கூடிய மக்கள், “நீங்களே நாயகன்” என்று கோசம் எழுப்பினர்.

இந்த சந்தேக நபரின் குடும்பத்தினருக்கு அவரது சேமிப்புப் பணம் மிக அவசியமாக இருக்கும் நிலையிலேயே அவர் இந்தச் செயலைச் செய்திருப்பதாக எல்.பி.சி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் சகோதரர் ஊடகவியலாளர்களிடம் கூறியிருப்பதாவது, “வங்கியில் எனது சகோதரருக்கு 210,000 அமெரிக்க டொலர்கள் உள்ளது. மருத்துவ செலவுக்கு 5,500 டொலர்கள் தேவைப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தமது உரிமைகளை பெற அனைவரும் இதனைச் செய்ய வேண்டும் என்று வங்கிக்கு வெளியில் இருந்த அவரது மனைவி மற்றும் சகோதரர் தெரிவித்துள்ளார்.

லெபனானில் வங்கிக் கணக்குகளை வங்கிகள் கட்டுப்படுத்துவது குறித்து மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். 2019 இல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வந்தது. பணத்தை வெளிநாட்டுக்கு பரிமாற்றம் செய்வதிலும் அந்த நாட்டில் கட்டுப்பாடு உள்ளது.

லெபனான் தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அங்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதோடு மருந்துகள் மற்றும் கோதுமைக்கு தட்டுப்பாடு உள்ளது.

இந்த வங்கிக்கு வெளியில் கூடிய மக்கள் “வங்கிகளின் ஆதிக்கம் ஒழிக” என்று கோசம் எழுப்பினர்.

இதேபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக லெபனான் வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜோர்ஜ் அல் ஹஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில், பக்கா பள்ளத்தாக்கில் உள்ள வங்கி ஒன்றில் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் பல டஜன் பேரை பணயக் கைதியாக பிடித்து, அமெரிக்க டொலரில் தமது பணத்தை பெற கோரினார்.

லெபனானில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்தது தொடக்கம் அந்நாட்டின் உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி 90 வீதம் வீழ்ச்சி கண்டது. நாட்டில் ஐந்தில் நான்கு பங்கினர் வறுமையில் வாழ்வதாக ஐ.நா குறிப்பிடுகிறது.


Add new comment

Or log in with...