பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு 'பவள விழா' இலங்கையில் கொண்டாடப்பட்டது

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு 'பவள விழாவை' கொண்டாடியது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளர் திருமதி அஸ்மா கமால், பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வியின் செய்தியை கலந்து கொண்டோர் முன்னிலையில் வாசித்தார். "பாகிஸ்தான் சுதந்திரத்தின் "பவள விழாவை" கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், முழு தேசத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தாயகமான "பாகிஸ்தானை" நமக்கு பெற்றுத்தந்த குவைத்-இ-ஆசம் முஹம்மது அலி ஜின்னாவின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நமது மூத்தோர்கள் ஆற்றிய எண்ணற்ற தியாகங்களை இந்த நாள் நினைவூட்டுகிறது. இன்று, பாகிஸ்தானின் சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கும், பாகிஸ்தானை ஒரு சிறந்த நவீன இஸ்லாமிய நலன்புரி தேசமாக மாற்றுவதற்குமான எங்களின் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரதமரின் செய்தியை ஊடக இணைப்பாளர் திருமதி கல்சூம் கைசர் பார்வையாளர்களுக்காக வாசித்தார். “பாகிஸ்தான் சுதந்திரத்தின் வைர விழாவை கொண்டாடும் இன்றைய தினம் நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும். துணைக் கண்டத்தின் முஸ்லிம்களுக்கு இன்று நாம் மரியாதையினை தெரிவிக்கிறோம். அவர்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்காகவும், ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான தியாகத்திற்காகவும் அவர்களுக்கு எங்கள் ஒட்டு மொத்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து கசவால்களையும் முறியடித்து பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவானது என்பது ஒரு அதிசயத்தற்க விடயமாகும்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் இங்கு உரையாற்றுகையில், “ஓகஸ்ட் 14 என்பது சந்தோசத்தின் நாளாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றியுடன் தலை வணங்கும் நாளாகும். பாகிஸ்தான் உருவாக்கத்தின் நோக்கங்களுக்காக ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்ற உறுதிமொழியை புதுப்பிக்கும் நாளாகும். இன்று நாம் எமது முன்னோர்களையும் தியாகிகளையும் நினைவு கூர்வதுடன், சுதந்திரமான தாயகத்தை எமக்கு வழங்குவதற்கு அசாதாரண தியாகங்களைச் செய்தமைக்காக அவர்களுக்கு எமது நன்றிகளை செலுத்துகின்றோம்.

அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக நமது அண்டை  நாடுகளுடனும் நல்லுறவைக் பேணுவதை நாங்கள் உறுதியளிக்கிறோம். எனவே தான், SAARC என்ற அமைப்பின் மூலம் தெற்காசியாவில் பிராந்திய இணைப்புக்கு பாகிஸ்தான் வலுவான ஆதரவாளராக தொடர்ந்து இருந்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் சார்க் அமைப்பின் முக்கிய அங்கத்தினர்கள். மேலும், இரு நாடுகளும் அவை உருவானதில் இருந்து வலுவான நட்பு மற்றும் சகோதரத்துவப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” என்று குறிப்பிட்டார்.

இராஜதந்திர உறுப்பினர்கள், பாகிஸ்தான் சமூகத்தினர், உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர், உள்ளூர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான PNS Taimur கப்பலின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...