‘சர்வதேச லீக் ரி20’ தொடரில் தசுன் சானக்கவும் இணைவு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சர்வதேச லீக் டி20 தொடரில் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் இணைந்துள்ளார்.

இதில் கிரோன் பொலார்ட், ட்வாயன் பிராவோ மற்றும் நிகொலஸ் பூரன் ஆகிய மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர்கள் மற்றும் இங்கிலாந்தின் ஒலி பொப் மற்றும் ஆப்கானின் பஸால்ஹக் பாரூக் ஆகியோரின் பெயர்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே இந்தத் தொடரில் விளையாடுவதற்கு 8 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, இலங்கையின் வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர, பானுக்க ராஜபக்ஷ, லஹிரு குமார, சீகுகே பிரசன்ன, சரித் அசலங்க, இசுரு உதான மற்றும் நிரோசன் திக்வல்ல ஆகிய வீரர்களின் பெயர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளன.

2023ஆம் ஆண்டு தொடரில் 34 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அனைத்து அணிகளும் மற்றைய அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடவிருப்பதோடு, தொடர்ந்து இறுதிப் போட்டி உட்பட நான்கு பிளே ஓப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகள் டுபாய், அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும்.

அதேநேரம் சர்வதேச லீக் டி20 தொடரில் பங்குபெறவிருக்கும் அணிகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் இந்தியாவினைச் சேர்ந்தவர்களாக இருப்பதன் காரணமாக, இந்த தொடரில் பங்கெடுக்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் அரசியல் பதற்றம் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...