நீதிமன்றில் முன்னிலையான அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை

- வெளிநாடு செல்ல தடை; பொலிஸில் வாக்குமூலம் வழங்குமாறு பணிப்பு

நீதிமன்றில் முன்னிலையான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற ஒன்றுகூடலின் உறுப்பினராக, ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கொண்டாட அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து, அவரை பொலிஸார் தேடி வந்திருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான ​​அவரை விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இன்றையதினம் (12) அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சட்டத்தரணிகள் ஊடாக நகர்த்தல் மனுவொன்றின் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

சந்தேகநபரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோரின் பிரவேசத்தால் ஜனாதிபதி மாளிகைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுவரை மதிப்பிடப்பட்டுள்ள பொருட்களுக்கமைய ரூ. 12 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர்.

ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் எனவும் மேலும் 10 பிரதான சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாகியுள்ளதால் பொலிஸாரால் கைது செய்ய முடியாதுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸை 21ஆவது சந்தேகநபராக பெயரிடுமாறு நீதிமன்றில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன, இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை தாம் மறுப்பதாக நீதிமன்றில் அறிவித்தார்.

அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி ஊடகங்களில் தெரிய வந்ததாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு அவரை கைது செய்யாதிருக்க அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளதாகவும் சட்டத்தரண தெரிவித்தார்.

சந்தேகநபரான அருட்தந்தை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்புகள் காரணமாக மக்கள் அதிக அளவில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்ததாகவும்,  அல்ஜசீரா ஊடகம் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் ஊடாக ஊடகவியலாளர் மாநாடுகளை நடாத்தி இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் இதன்போது நீதிமன்றில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, அருட்தந்தை ஜீவந்த பீரிஸை தலா ரூ. 5 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், வெளிநாடு செல்வதற்கு எதிராகவும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாளையதினம் (13) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...