பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை

ஶ்ரீ தலதா உள்ளிட்ட அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதமும் அதற்கு பலமாக அமைய வேண்டும்
- கண்டி பெரஹரா நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த போதிலும் அந்த நெருக்கடியில் இருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு தலதா மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக அமையுமென சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா பெரஹரா விழா மற்றும் வருடாந்த நான்கு மகா விகாரைகளின் ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்கள் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களின் நிலமேக்கள் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியினால் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தியவதன நிலமே சம்பிரதாயபூர்வமாக பெரஹரா நிறைவடைந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓலையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

ஊர்வலத்தில் பயணித்த யானைகளுக்கு அடையாள ரீதியாக உபசாரம் செய்யும் வகையில் "சிந்து" எனும் யானைக்கு பழங்கள் வழங்கி உபசரித்தார்.

பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சம்பிரதாயபூர்மாக பரிசுகள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 07 அதி விசேட விருதுகள் உள்ளிட்ட 162 விருதுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. எசல பெரஹரா அறக்கட்டளை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன வருடாந்தம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் வரலாற்றுப் புகழ்மிக்க பெரஹரா (ஊர்வலம்) நிறைவு பற்றிய விடயங்கள் அடங்கிய அறிவிப்பை ஜனாதிபதி தலைமையிலான சபையில் சமர்ப்பித்தார்.

கிராமிய விகாரைகளுக்கான "எசல பெரஹரா அறக்கட்டளை" யிற்கான நிதியுதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதுடன், "புனித தலதா கலாசாரம்" நூலும் இதன்போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...