அமீரகம், நியூசிலாந்து தூதுவர்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தூதுவருக்கு விளக்கமளித்தார். விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்பில் ஈடுபடுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இலங்கை - ஐக்கிய அரபு இராச்சிய இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இந்த நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

பல தசாப்தங்களாக நிலவி வரும் நட்பு ரீதியான நல்லுறவுகளைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சவாலான காலங்களில் நியூசிலாந்து நல்கிய தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உயர்ஸ்தானிகரிடம் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கைக்கான நியூசிலாந்து அரசாங்கத்தில்ன் தொடர்ச்சியான உதவிகளை உயர் ஸ்தானிகர் அப்பிள்டன் உறுதியளித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...