19ஆம் திகதி முதல் வழமை போன்று மண்ணெண்ணெய் விநியோகம்

விலை திருத்தம் கொண்டு வரவும் நடவடிக்கை

மசகு எண்ணெய் கப்பல் விரைவில் நாட்டுக்கு வருவதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறுமென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மசகு எண்ணெய்யுடன் கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததும் 15 ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென சபையில் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் கடந்த வாரங்களில் புத்தளம்,தங்காலை,கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்கள்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சில பஸ் உரிமையாளர்கள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்துகின்றார்கள். தொடர்ந்தும் அதற்கு இடமளிக்க முடியாது.

நாங்கள் தொடர்ந்தும் பழைய விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்க முடியாது. மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் போது கடற்றொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சேவையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக நடைபெற்ற எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் போது மேலதிக கடமைகளை மேற்கொண்டோருக்கே மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அது தவிர்க்க முடியாதது. முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு பதில் வழங்கும் வகையில் உண்மையான நிலை தொடர்பில் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...