பெருந்தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்கள் களையப்பட வேண்டும்

இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வழங்கி இருக்கின்றது. அதுதான் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாள் ஒன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக ரூபா 1000.00 ஐ நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவை (ரீட் மனு) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து இருப்பதாகும்.

இந்த நாட்சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக 20 பெருந்தோட்டக் கம்பனிகள் இணைந்து 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தன. இந்த மனுவின் அடிப்படையில் இவ்வர்த்தமானிக்கு பெருந்தோட்டக் கம்பனிகள் கோரிய இடைக்கால தடைஉத்தரவு மனு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முதலில் நிராகரிக்கப்பட்டது. தற்போது இந்த வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்திருக்கின்றது மேன்முறையீட்டு நீதிமன்றம்.

இதன் ஊடாக தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூபா 1000.00 ஐ நாட்சம்பளமாக வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் ஊடாக தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்பதும் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்பதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கும் தீர்ப்பு என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தம் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்க காலம் முதல் கோரிக்கை விடுத்து வந்தனர். இச்சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள் எனப் பல நடவடிக்கைகளையும் தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்தனர். இச்சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் துரைமார் சம்மேளனத்திற்கும் இடையில் பல மட்ட முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன. இருந்தும் முதலாளிமார் சம்மேளனம் அவற்றுக்கு இணங்க மறுத்து வந்தது

இந்த நிலையில் 2021 இல் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்ட அரசாங்கம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாப்படி நாட்சம்பளம் பெற்றுக்கொடுப்பதற்கான அதிவிஷேட வர்த்மானி அறிவித்தலை விடுத்தது. அந்த வர்த்தமானிக்கு எதிராகவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இந்த ஆயிரம் ரூபா நாட்சம்பள கோரிக்கை இற்றைக்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டதாகும். அன்றைய வாழ்க்கைச் செலவு நிலைமையை அடிப்படையாகக் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அப்படியிருந்தும் 2021 வரையும் அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கோ, ஏற்றுக் கொள்வதற்கோ முதலாளிமார் சம்மேளனம் முன்வரவில்லை. இது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத செயற்பாடாகும்.

ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாட்சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்த காலப்பகுதியை விடவும் இன்று பல மடங்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இதற்கு நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி பெரிதும் பங்களித்து இருக்கின்றது. இதன் விளைவாக நாட்டின் எல்லாத் தரப்பினரையும் போன்று பெருந்தோட்டத் தரப்பினருக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தாக்கமாகவும் அழுத்தமாகவும் அமைந்துள்ளது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரிதும் வரவேற்றுள்ளனர். அதேநேரம் தற்போதைய சூழலில் ஆயிரம் ரூபா நாட்சம்பளம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதல்ல. அதனால் முதலாளிமார் சம்மேளனம் தற்போதைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் நியாயமான முறையில் செயற்படத் தவறலாகாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணத்தினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை நியாயக்கண் கொண்டு நோக்க முதலாளிமார் சம்மேளனம் முன்வர வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பை வழங்க முதலாளிமார் சம்மேளனம் முன்வர வேண்டும் என்பதுதான் எல்லா தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. அது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை செலவு சுமையைக் குறைக்க உதவுவதாகவும் அமையும்.


Add new comment

Or log in with...