மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்

- சபையில் மருதபாண்டி இராமேஸ்வரன் எம்பி தெரிவிப்பு

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கொள்கை விளக்க உரையில் குறிப்பிட்டுள்ளதை வரவேற்பதாக மருதபாண்டி ராமேஸ்வரன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்க கோரி முதலாளிமார் சம்மேளனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பளம் உறுதி யாகியுள்ளது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

எனினும் தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அவர்களின் சம்பளத்தில் அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஓரிரு தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மலையக மக்கள் தமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக யுத்தம் செய்தோ போராடியோ செயற்பட்டவர்கள் அல்ல.நாட்டின் பொருளாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் அவர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதேபோன்று கடந்த சில தினங்களாக மலையக பகுதியில் இடம்பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுரள்ள மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

Or log in with...