சன்மார்க்க அறிஞர் ஹாசீம் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு

தும்புளுவாவ ஜமாஅத்தைச் சேர்ந்தவரும், ஹெம்மாதகம ஜம்இய்யதுல் உலமாசபையின் முன்னாள் உபதலைவரும், ஓய்வு பெற்ற அதிபருமான ஹாசீம் மௌலவி (வயது 88) கடந்த திங்கட்கிழமை (08) காலமானார். தும்புளுவாவை கிராமத்தில் 1934ஆம் ஆண்டு பிறந்த ஹாசீம் ஆலிம், காலி பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரியில் 1958ஆம் ஆண்டு சன்மார்க்கக் கல்வியைக் கற்று மெளலவி பட்டம் பெற்றார்.

அன்னாரது மறைவு குறித்து ஹெம்மாதகம ஃபோரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்

'ஹெம்மாதகமை பிரதேசத்திலும் மற்றும் இலங்கைத் தீவின் பல்வேறு பகுதிகளிலும் பொதுவாகவும் சன்மார்க்கப் பணியில் ஈடுபடக் கூடிய உலமாக்களை உருவாக்குவதற்காக 1970களின் ஆரம்பத்தில் ஓலனையில் உருவாக்கப்பட்ட ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரியினதும்,  ஹெம்மாதகம ஜம்மிய்யதுல் உலமா அமைப்பினதும் ஸ்தாபக உறுப்பினராகவும் அதன் ஸ்தாபகச் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்து சமய சன்மார்க்க வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய எம். எச். எம். ஹாசீம் மெளலவியின் மறைவையிட்டு ஹெம்மாதகம போரம் தமது மிகுந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியராகவும் பாடசாலை அதிபராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றிய ஹாசீம் ஆலிம், இறுதியாக கொழும்பு சாஹிரா கல்லூரியில் பணியாற்றி, 2002இல் ஓய்வு பெற்றார். பல வருட காலங்கள் கிராமத்திற்கு வெளியே பணியாற்றினாலும், தும்புளுவாவை  பள்ளிவாசல் உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் (1970) அதன் பொறுப்பாளராகவும் சேவையாற்றினார். 

ஹாசீம் ஆலிமின் மறைவு எமது சமூகத்திற்கு பேரிழப்பாகும். சன்மார்க்க அறிஞர்களதும் சமூகத் தலைவர்களதும், கல்விமான்களதும் இறப்புகள் பொதுவாக சமூகங்களில் வெற்றிடங்களை ஏற்படுத்துகின்றன. ஹாஷிம் ஆலிமின் மறைவினால் கவலையுயுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றும் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.ஸாகிர்...


Add new comment

Or log in with...