கும்பல் பெரஹரா ஊர்வலத்துக்கு தாயுடன் சென்ற குழந்தையைக் கடத்திய இளைஞர்!

கண்டியில் நடைபெற்ற எசலபெரஹராவின் இரண்டாவது கும்பல் பெரஹரா ஊர்வலத்தைக் காண்பதற்கு தனது தாயுடன் சென்றகுழந்தையைக் கடத்தியதாகக் கூறப்படும் நபர் கண்டி நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி, அகஸ்டாவத்த பகுதியைச் சேர்ந்த 30வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். விளையாட்டுப் பொம்மைகளை எடுத்து வருவதற்காக குழந்தையை அழைத்துச் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இது இவ்வாறிருக்க, குறித்த நபர் இதற்கு முன்பும் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றுள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

சந்தேக நபர், கடந்த 5ஆம் திகதி குறித்த குழந்தையுடன் கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில், குழந்தை தனது தாயிடம் செல்ல விரும்புவதாகக் கூறி ரயிலில் இருந்து குதிக்க முற்பட்டுள்ளது.

அவ்வேளையில் அக்குழந்தையின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய பயணிகள், அக்குழந்தையிடம் விபரங்களைக் கேட்டுள்ளனர். அதன் போது பயணிகளுக்கு அந்த இளைஞர் மீது சந்தேகம் தோன்றியுள்ளது. அந்த இளைஞர் ரயிலில் வைத்து பயணிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன் பின்னரே அக்குழந்தை கடத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

கண்டி மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த பொழுது குறித்த சந்தேக நபர் குழந்தையுடன் பேச பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்ததாக குழந்தையின் தாய் அனோமா  தில்ருக்ஷி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

மேலும் குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக, தனது கையடக்கத் தொலைபேசியிலிருந்து அவரை வீடியோ எடுத்து மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் அந்த வீடியோவை ஒப்படைத்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார். 

குழந்தையின் தாய், கண்டி மாநகரசபையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார். இரண்டாம் நாள் உற்சவ ஊர்வலம் முடிந்ததும் கண்டி மணிக்கூண்டுக்கு அருகில் வெற்றிலை விற்றுக் கொண்டிருந்த தனது அம்மாவின் அருகில் குழந்தையை நிறுத்திவிட்டு, மாநகர சபைக்குச் சென்ற போது சந்தேகநபர் குழந்தையை கடத்தி சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எம்.ஏ.அமீனுல்லா...


Add new comment

Or log in with...