காஷ்மீர் தயாரிப்புகளை தேசிய, சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள்

காஷ்மீர் உற்பத்திகளையும் கைவினைப்பொருட்களையும் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் விளம்பரப்படுத்துவதற்கு ஜம்மு காஷ்மீர் அரசு விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 'உள்ளுர் மக்களுக்கான குரல்' என்ற திட்டத்தின் கீழ் காஷ்மீரின் உற்பத்திகளுக்கும் கைவினைப் பொருட்களுக்கும் சர்வதேச சந்தையில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

தன்னம்பிக்கை மிக்க இந்தியா என்ற இலக்கை அடைய, 'உள்ளூர் மக்களுக்கான குரல்' என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் தனித்துவ மிக்க தயாரிப்புகள் ஒழுங்கமைப்பை பெற்றுள்ளதோடு  பல உற்பத்திகள் போட்டித்தன்மையையும் கொண்டுள்ளன. இவ் உற்பத்திகளின் தரம் மற்றும் ஒழுங்கமைப்பானது  அவற்றை கொள்வனவு செய்பவர்களை உலகளாவிய ரீதியில் ஈர்க்கக்கூடியனவாகவும் உள்ளன.

கொவிட் 19 பெருந்தொற்று தடுப்பூசி வழங்குதல் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உட்பட முழு நாடும் கொரோனா  பீதியில் இருந்து வெளியே வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைவினைத் தொழிற்றுறை  மீண்டும் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்நிலையில் தனித்துவம் மிக்க காஷ்மீர் உற்பத்தி மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதோடு அவற்றுக்கான உலகளாவிய சந்தை வாய்ப்புக்களை  உருவாக்கும் நோக்கில் பாரியளவு கொள்வனவாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான கூட்டமொன்று கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு திணைக்களத்தினால் ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி என்ற திட்டத்தின் கீழ் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

'இக்கூட்டத்தின் போது உலகப் புகழ்பெற்ற காஷ்மீரி குங்குமப்பூ, ஹிமாலயன் வெள்ளை அகாசியா தேன், சிவப்பு பளபளப்பான கிட்னி பீன்ஸ், புதிதாக வளர்க்கப்பட்ட இயற்கை பசளை மரக்கறி வகைகள் உள்ளிட்ட காஷ்மீரின் தனித்துவம் மிக்க உற்பத்திகளையும் தயாரிப்புகளையும் உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தினர்' என்று ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தனித்துவமான காஷ்மீர் தயாரிப்புகளை ஊக்குவிக்கவென புவியியல் குறியீட்டு குறியிடலுக்கான முயற்சிகளை ஜம்மு காஷ்மீர் அரசு ஆரம்பித்துள்ளது. இது காஷ்மீரின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை, காஷ்மீரின் அப்பிள் போன்ற சில விவசாயப் பொருட்களை பிரபல்யப்படுத்தவென புதிய முயற்சிகளையும் தொடங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கைவினைப் பொருட்களை சார்ந்து சுமார் 250,000 கைவினைஞர்கள் வாழுகின்றனர். கைவினைப் பொருட்கள் உற்பத்தித் துறையுடன் சம்பந்தப்பட்ட சுமார் 180 பெரிய கைவினைக் கொத்தணிகள் இங்குள்ளன. அத்தோடு 4.3 மில்லியன் நெசவாளர்களும் 6.9 மில்லியன் கைவினைஞர்களும் இங்கிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...