நம் அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை மழுங்கடிப்பது விழிப்பற்ற மனநிலையே

நம் உள்ளத்திலும், அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்மால் உணரமுடியாமல் நம் அறிவையும் சிந்தனைகளையும் மழுங்கடிப்பதே விழிப்பற்ற மனநிலைதான். 

 இவ்வுலக மாயையும் செல்வத்தின்மீதான பேராசையுமே கடவுளைக் காணும் நம் அகக் கண்களை மறைக்கின்றன. ஆகவே, விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமைப்போல் கடவுளை மட்டுமே நாம் பெரும் செல்வமாகக் கொண்டிருந்தால் இயேசு கூறும் விழிப்புணர்வுள்ள பணியாளர்களாய் வாழ்ந்திட முடியும்.

 மலையில் இருக்கும் குகை ஒன்றில் தியானம் செய்வதற்காக குருவும் சீடரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். நடக்கத் தொடங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது. குரு மெளனமாகப் பின்னால் வர சீடர் வேகமாக முன்னால் நடந்து கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் குருவின் பார்வையில் மறைந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டார் சீடர்.  குரு மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தார். சில நிமிடங்கள் கடந்தன. விரைவாகச் சென்ற சீடர் தூரத்தில் சோர்வுடன் அமர்ந்திருந்தார். குரு கையில் ஒரு பச்சிலையுடன் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவர் சீடரிடம் வந்ததும் தன் கையிலிருந்த பச்சிலையைச் சீடரிடம் கொடுத்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். சீடர் அதனை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் வீசியது. அதன் மணம் சீடரின் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

“குருவே இது என்ன இலை?” என்று சீடர் கேட்க, “இதன் பெயர் எலுமிச்சைப் புல். இது சாதாரண புல்லைப் போலத் தோன்றினாலும் எலுமிச்சை மணம் கொண்டது” என்று பதிலளித்தார். “குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று சீடர் கேட்க, புன்னகைத்தவாறே,,. கேள்...” என்றார் குரு. 

 ”ஆன்மீக உயர்வடைய ஒருவருக்கு குரு அவசியம்தானா?” “ஒருவருக்கு விழிப்புணர்வு கிடைக்கும் வரை அவருக்கு குரு அவசியமா” “விழிப்புணர்வு என்பது என்ன?” என்று சில கேள்விகளை எழுப்பினார் சீடர்.

 குருவோ “நான் கொடுத்த எலுமிச்சைப் புல்லை முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சைப் புல்லைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்று குரு கேட்க, “தெரியாது” என்றார் சீடர்.

 “நான் வரும் வரை இங்கே அமர்ந்திருந்தாயே. உன் கால்களுக்கு அருகிலேயே அந்தப் புல் புதர் போல   வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்குக் கீழே அந்தப் பொருள் இருப்பது கூடத் தெரியாமல், இன்னொருவர் அதை உனக்குத் தரும் வரை இங்கு நீ அமர்ந்திருக்கிறாய். நீ விழிப்புணர்வு கொண்டவனாக இருந்திருந்தால் உனக்கே அது தெரிந்திருக்கும்” என்றார் குரு.

“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?” என்று சீடர் வினவ, “விழிப்புணர்வு வரும் வரை குரு தேவைதான். விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்” என்றார். அப்படியெனில் அனைவருக்கும் குரு தேவையா?” என்று சீடர் மீண்டும் கேட்க, “ஆம். அதனால்தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலுமிச்சைப் புல் வளர்கிறது, உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்” என்றார்.

நம் உள்ளத்திலும், அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்மால் உணரமுடியாமல் நம் அறிவையும் சிந்தனைகளையும் மழுங்கடிப்பதே விழிப்பற்ற மனநிலைதான்.   நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமைப்போல் கடவுளை மட்டுமே நாம் பெரும் செல்வமாகக் கொண்டிருந்தால் இயேசு கூறும் விழிப்புணர்வுள்ள பணியாளர்களாய் வாழ்ந்திட முடியும். அதற்கான அருள்வரத்தை இறைவனிடம் கேட்போம்.


Add new comment

Or log in with...