வடக்கு மாகாண நிர்வாகம்: தவறுகள் செய்த அதிகாரிகள் தாமாக வெளியேறுவது சிறந்தது

மாகாண நிர்வாகத்தை வினைதிறனாக நடத்த வழிவிட வேண்டும்

கடந்த காலங்களில் வடக்கு மாகாண நிர்வாகத்தில் தவறுகளை விட்ட அதிகாரிகள் தாங்களாகவே உணர்ந்து வெளியேறி மாகாண நிர்வாகத்தை வினைதிறனாக நடத்துவதற்கு வழி விட வேண்டும் என வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தில் கீழ்நிலை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மறைக்கப்பட்டு ஒரு சில மேல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் செயற்பட்டமை தமக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பொதுவான கட்டமைப்பு.

இலங்கையில் உள்ள ஏனைய எட்டு மாகாணங்களில் உள்ள விவசாய பணிப்பாளர்கள் எவ்வளவு காலம் பணியில் இருந்தார்கள். எவ்வளவு காலம் இருக்க முடியும் என ஆராய்ந்தால் வடக்கு மாகாணத்தின் செயற்பாடுகள் சற்று வித்தியாசமாக இருக்கிறது.

வடக்கு நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு எவ்வளவு காலத்துக்குள் மனித உரிமை ஆணைக்குழு தீர்வை வழங்கியுள்ளது.

வட மாகாண பிரத செயலாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட மாகாண நிர்வாக அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகளை எவ்வளவு காலத்துக்குள் முடிவுறுத்தப்பட்டது? சில முரண்பாடுகள் மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன? சில முறைப்பாடுகள் விசாரிக்கும் போது குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயர் கூட குறிப்பிடாமல் விசாரணைகள் இடம் பெற்றமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஒரு சிலரின் தேவைக்கேற்ற சினேக பூர்வமாகச் செயற்படும் அதிகாரிகளினால் கீழ் நிலை அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது.

பொதுமக்களால் அல்லது அதிகாரிகளினால் சக அதிகாரிகள் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை இடம்பெற்று உறுதிப்படுத்தப்படுமானால் பணிநீக்கம் அல்லது தண்டனை வழங்குதலை ஆளுநர் என்ற வகையில் மேற்கொள்வேன். இவ்வளவு காலமும் தவறுகள் செய்தவர்கள் தாங்களாகவே இடமாற்றத்தைப் பெற்றுச் சென்று மாகாண நிர்வாகத்தை உரிய முறையில் மேற்கொள்ள வழிவிட வேண்டும்.

எனது பொறுமையைய் சோதிக்க விரும்பினால் விசாரணைக் குழு அமைத்து எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு முறைகேடுகள் தொடர்பில் பொது வெளியில் அம்பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...