அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை கைவிட்டது சீனா: போர் ஒத்திகைகள் தொடர்ந்தும் உக்கிரம்

தாய்வான் தொடர்பில் இரு வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் விரிசல் அடைந்திருக்கும் நிலையில் காலநிலை மாற்றம், போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகள் உட்பட முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை கைவிடுவதாக சீனா நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தாய்வானுக்கு பயணித்ததை அடுத்து சீனா அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. தாய்வனை தனது பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா, அதனை இணைப்பதற்கு தேவை ஏற்படின் இராணுவத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் மறுக்கவில்லை.

கடந்த வியாழக்கிழமை தொடக்கம் தாய்வானை சுற்றிவளைத்து பாரிய போர் ஒத்திகைகளை சீனா நடத்தி வருகிறது. இதனை அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகள் கண்டித்துள்ளன.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சு நேற்று அமெரிக்காவுக்கு எதிராக மேலும் அதிரடி நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறுபட்ட உடன்படிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புகளை இடைநிறுத்துவதாக சீனா அறிவித்தது.

உலகின் மிகப்பெரிய சூழல் மாசுக்குக் காரணமான இந்த இரு நாடுகளும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவதாக கடந்த ஆண்டு உறுதிபூண்டிருந்தன. காலநிலை பற்றிய பிரச்சினை தொடர்பில் வழக்கமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த இரு நாடுகளும் இணங்கின.

மறுபுறம் தாய்வானுக்கு பயணித்த பெலோசி மீது சீனா தடைகளை அறிவித்துள்ளது. எனினும் நேற்று தனது பயணத்தை காத்துப் பேசிய பெலோசி, தாய்வானை சீனா தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அங்கமாக தாய்வானுக்குச் சென்ற நான்சி பெலோசி, நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சீன எச்சரிக்கையை மீறி தாய்வானுக்குச் சென்றதால் தமக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள சீன நடவடிக்கை குறித்தும் பேசினார்.

அப்போது அவர், “எங்களுடைய பயண நிரலை வடிமைப்பது சீனா கிடையாது,” என்று தெரிவித்தார்.

இந்தப் பயணத்திற்கு எதிராக சீனாவின் பதில் செயற்பாடுகள் பற்றி தாய்வானும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பதற்றத்தை தணிப்பதற்கு கூட்டணி நாடுகளுக்கு தாய்வான் பிரதமர் சூ செங் சென்ச் அழைப்பு விடுத்துள்ளார்.

‘அண்டையில் இருக்கும் கொடிய அயலவர் எமது அதிகாரத்தையும் உலகின் பரபரப்பான கடல்பகுதியில் தன்னிச்சையான ஆபத்தை ஏற்படுத்தும் அதன் போர் ஒத்திகையையும் கைவிடும் என்று எதிர்பார்க்க முடியாது’ என அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாய்வான் தீவின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியில் போர் ஒத்திகையை மீண்டும் ஆரம்பித்திருப்பதாக சீன இராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.விமானப்படை மற்றும் கடற்படையின் போர் தளவாட திறன்களை பரிசோதிக்கும் நடவடிக்கையாக இந்த கூட்டுப்படை ஒத்திகை நடத்தப்படுவதாக சீன சமூக ஊடக தளமான வெய்போ தெரிவித்துள்ளது.

தனது போர்ப்பயிற்சியின் ஒரு பகுதியாக 11 ஏவுகணைகளை தாய்வானைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் சீனா ஏவியது. அதிக உயரத்துக்குச் சென்று இலக்கை நோக்கி விழும் பாலிஸ்டிக் ரகத்தைச் சேர்ந்தவை இந்த ஏவுகணைகள்.

தாய்வானின் நிலப்பரப்புக்கு மேலே சில ஏவுகணைகள் சென்றதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக சீனா எதுவும் கூறவில்லை.

இதேவேளை ஏவுகணை அமைப்புகளை தாய்வான் தனது எல்லையில் நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.

எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிட தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தாய்வான் மட்டுமல்லாமல் அருகேயிருக்கும் ஜப்பானுக்கும் சீனாவின் போர் ஒத்திகை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 ஏவுகணைகள் தாய்வானுக்கு மேலே பறந்ததாகவும், 5 ஏவுகணைகள் ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் விழுந்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை இந்தப் போர் ஒத்திகை தொடரும் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா மற்றும் தாய்வான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பீஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார். இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தாய்வானுக்கு தப்பி ஓடியது.

தாய்வான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தாய்வானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாத்திகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தாய்வானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.


Add new comment

Or log in with...