சீன 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்துக்கு முதன்மை நாடுகளில் தடை

- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அச்சம்

சீனாவின் இரு பெரும் இலக்ட்ரோனிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களான ஹுவாவி மற்றும் இஸட்.டி.ஈ. ஆகியவற்றின் மீது பல உலக நாடுகள் அவை சீன இராணுவத்தின் கையாட்களாக செயல்படுவதாகக் கருதி கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.

5 ஜி தொழில்நுட்பத்தில் அதி முன்னேற்றம் கண்டுள்ள ஹுவாவி நிறுவனத்தைத் தமது நாடுகளில் தொழில்செய்ய அனுமதிப்பது அந்நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் எனக் கருதப்படுவதையடுத்தே ஹுவாவி நிறுவனத்தின் 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்ப செயல்பாடுகளை தடைசெய்வதற்கு அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனம் சீன அரசுடனும் சீன இராணுவத்துடனும் நெருக்கமான தொடர்புகளை பேணி வருவதாகவும் இதனால் சீனாவின் ஏனைய தொழில்நுட்ப பெரு நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹுவாவியினால் முன்னணியில் திகழ முடிகிறது என்றும் இந்நாடுகள் கருதுகின்றன. 2019 ஆம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஹுவாவி 5 ஜி தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு அமெரிக்கா தடைவிதித்தது. அமெரிக்க நீதித்துறை 2019 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் வர்த்தக இரகசியங்களைத் திருடுவதாகத் தெரிவித்திருந்தது. இதே ஆண்டில் ஹுவாவியினால் உற்பத்தி செய்யப்படும் தொலைத்தொடர்பு கருவிகளை தமது நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தடைவிதித்தது.

2018 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் 5 ஜி பயன்பாட்டுக்கு அவுஸ்திரேலியா தடைவிதித்தது. இதேபோன்ற தடையை ஜப்பானும் ஹுவாவி மற்றும் இஸட்.டி.ஈ. நிறுவனங்களின் மீது கொண்டுவந்தது. 2020 இல் இந்தியா இந்த அலைக்கற்றை பாவனைக்கு தடை கொண்டு வந்தது. 2018 இல் பிரிட்டன் தடையை அமுலுக்குக் கொண்டுவந்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி 5 ஜி பயன்பாட்டின் மீது தடையைக் கொண்டுவந்த கனடா, 2018 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரை கைதுசெய்ததாக கனடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் ஹுவாவி மீது முழுமையான ஒரு தடையை விதிக்காவிட்டாலும் தமது அடுத்த ஜெனரேஷன் கைபேசி வலைப்பின்னல் உருவாக்கத்தில் இந் நிறுவனத்தின் செயற்பாடுகளின் மீது தடையைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.


Add new comment

Or log in with...