பொதுநலவாய ரி20: இலங்கை மகளிர் அணிக்கு கடைசி போட்டியிலும் தோல்வி

பொதுநலவாய விளையாட்டு விழாவின் மகளிர் ரி20 தொடரில், கடந்த நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (04) நடைபெற்ற தனது இறுதி குழுநிலைப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவை எதிர்கொண்டு 10 விக்கெட்டுக்களால் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தொடரில் குழு பி இல் காணப்படும் இலங்கை அணி ஏற்கனவே இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து பேர்மிங்ஹாமில் ஆரம்பமாகிய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க வீராங்கனைகளின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 17.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 46 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துக் கொண்டது. இது இலங்கை மகளிர் அணி டி20ஐ போட்டிகளில் பெற்ற அதிகுறைவான ஓட்டங்களாகவும் பதிவானது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சாமரி அத்தபத்து 15 ஓட்டங்களை எடுத்ததோடு, அவர் மாத்திரமே அணியில் ஈரிலக்க ஓட்டங்கள் பெற்ற வீராங்கனையாகவும் மாறினார்.

மறுமுனையில் தென்னாபிரிக்க பந்துவீச்சில் நடைன் டி கிளர்க் வெறும் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மசாபடா கிளாஸ் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 47 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, வெறும் 6.1 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கினை விக்கெட் இழப்பின்றி அடைந்தது.

தென்னாபிரிக்க மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் டஸ்மின் பிரிட்ஸ் 21 ஓட்டங்களையும் அன்னகே போஸ்ச் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்தனர்.

இப்போட்டியின் தோல்வியோடு இலங்கை மகளிர் அணி தொடரில் மூன்று தொடர் தோல்விகளை பதிவு செய்ய, தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு இது தொடரில் முதல் வெற்றியாக மாறியது.


Add new comment

Or log in with...