பெட்மின்டனில் இலங்கை வீரர்கள் வெற்றிகள் குவிப்பு

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான தனிநபர் பெட்மிண்டன் இரண்டாவது சுற்றில் பார்படோஸ் வீரர் ஷே மைக்கல் மார்டினை எதிர்கொண்ட இலங்கை வீரர் நிலூக கருணாரத்ன 2-0 என இலகுவான வெற்றியை பெற்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

போட்டியின் இரண்டு செட்களிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 21-6 மற்றும் 21-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.

அதேநேரம் மற்றுமொரு வீரரான துமிந்து அபேவிக்ரம இரண்டாவது சுற்றில் மோல்டா வீரர் சாமுவெல் கேஸரை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார். இவர் 21-12 மற்றும் 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தார்.

அடுத்த சுற்றில் துமிந்து அபேவிக்ரம இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை எதிர்கொள்ளவுள்ளதுடன், நிலூக கருணாரத்ன சிங்கபூர் வீரர் ஜியா ஹெங் தேவை எதிர்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றில் பங்கேற்ற இலங்கையின் சச்சின் டயஸ் மற்றும் திலினி ஹெந்தேவா ஆகியோர், கனடா அணியை எதிர்த்து 2-0 என வெற்றிபெற்றுள்ளனர்.

இலங்கை அணியானது 21-11 மற்றும் 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றதுடன், இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் தென்னாபிரிக்க அணியை இன்றைய தினம் (06) எதிர்கொள்ளவுள்ளது.

அதேநேரம் பெட்மிண்டன் போட்டிகளில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் பார்படோஸை 2-0 என வீழ்த்திய இலங்கை ஆடவர் இரட்டையர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. சச்சின் குணதிலக்க மற்றும் புவனேக குணதிலக்க ஆகியோர் பார்படோஸ் அணியை 21-12 மற்றும் 21-9 என வீழ்த்தினர். இவர்கள் இருவரும் தங்களுடைய அடுத்த போட்டியில் மாலைத்தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை பெண்களுக்கான தனிநபர் இரண்டாவது சுற்றில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை விதுரா சுஷானி, இங்கிலாந்து வீராங்கனை பிரேயா ரெட்பனிடம் 0-2 என தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...