ஸ்குவாஷில் இலங்கை வெற்றி

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை ஆண்கள் இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி 2-0 என வெற்றியை பதிவுசெய்துள்ளது. ரவிந்து லக்சிறி மற்றும் வகீல் ஷமீல் ஆகியோர் இணைந்து கயானா வீரர்களான வில்ஷையர் ஷொமரி மற்றும் கஹ்லீல் ஜேசன் ஆகியோரை வீழ்த்தியுள்ளனர்.

போட்டியின் முதல் செட்டை 11-5 கைப்பற்றிய இவர்கள், இரண்டாவது செட்டை 21-6 என இலகுவாக கைப்பற்றினர். இலங்கை அணியானது, அடுத்த சுற்றில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை அணி 0-2 என தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் யெஹானி குருப்பு மற்றும் சினாலி சந்திமா ஆகியோர் இந்தியாவின் சுனைனா குருவில்லா மற்றும் அன்ஹட் சிங் ஆகியோரை எதிர்கொண்டு 9-11 மற்றும் 4-11 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தனர்.

இதேவேளை ஆண்களுக்கான 51-54 கிலோகிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டையின் காலிறுதிப்போட்டியில் இலங்கை வீரர் ருக்மால் பிரசன்ன தோல்வியடைந்தார். போட்டியின் கானா வீரர் ஆப்ரஹாம் மென்ஷாஹ்விடம் தோல்வியடைந்த அவர், தன்னுடைய அரையிறுதிக்கான வாய்ப்பையும் இழந்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 54-57 கிலோகிராம் எடைப்பரிவு குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனை சஞ்சீவனி குரே அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தார். காலிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவின் பிவகுலே ஸ்பசிஸிவேயை இவர் எதிர்கொண்டு தோல்வியடைந்திருந்தார்.


Add new comment

Or log in with...