அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகம்

- CTB டிப்போக்கள் மூலம் தொடர்ந்தும் வழங்குவதை உறுதிப்படுத்தவும்

- உயர் நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தல் விடுப்பு

அத்தியாவசிய சேவைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை மூலம், எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்வது அவசியமென உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை, நேற்று நடைபெற்ற போதே உயர் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலையால், மக்களுக்கு எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விநியோக சேவைகளை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கும் வகையில் நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத் திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரியே மேற்படி அடிப்படை உரிமை மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகளான விஜித் மலல்கொட, அர்ஜுன ஒபேசேகர ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது நீதிமன்றத்திற்கு கருத்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரின் புள்ளே, எரிபொருள் விநியோகம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளில், பெருமளவு தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

இதன் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இலங்கை போக்குவரத்து சபை மூலம் எரிபொருள் விநியோகிப்பதை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

மேற்படி, அடிப்படை உரிமை மனுக்கள் மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...