சர்வகட்சி அரசை தமிழ்க் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிக நெருக்கடியான ஒரு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி ஒரு புதிய அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவேன் என்ற இலக்கை நோக்கி செயற்படுபவராக பதவியேற்றுள்ளார். அவர் ஒரு நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்.

ஜனாதிபதி மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுவதை ஒருபுறம் வைத்துவிட்டு இதை சாதகமாகப் பார்ப்போமானால் சில முக்கியமான விஷயங்களை அவதானிக்கலாம். நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் மதியைக் கூர்மையாகப் பயன்படுத்தக் கூடிய ஆட்சியாளரே அவசியம். அவர் மீது விமர்சனங்களை வைக்கும் அனைவருமே உள்ளூர இவர்தான் இப்போதைய சூழலைக் கையாளக் கூடியவர் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.

அதேசமயம் பாராளுமன்றத்தில் எவ்வாறு அவரால் 134 வாக்குகளைப் பெற முடிந்தது என்பதையும் சித்தித்துப் பார்க்க வேண்டும். மிகச் சாதாரண சிங்கள மக்களும், இன்றைய பொழுதுக்கு இவர்தான் பொருத்தம் என்பதை ஏற்கவே செய்கிறார்கள். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடமும் இந்த எண்ணத்தைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.

எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எல்லா நகர்வுகளையும் வேறொன்றுடன் தொடர்புபடுத்தி வியாக்கியானங்கள் செய்வதை விட்டுவிட்டு, நாட்டின் பொதுநலன்கள் தொடர்பாக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் திட்டங்களையும் அவர் சரியான முறையில் மேற்கொள்கிறாரா, அவருக்கு பாராளுமன்றமும், கட்சிகளும் உதவுகின்றனவா என்பதே இங்கே முக்கியம். சுழியில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடுபவரை உடனடியாக மீட்பதா அல்லது எந்த முறையில் மீட்டால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும் என்று விவாதித்துக் கொண்டிருப்பதா?

நாட்டை மீட்பது தொடர்பில் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முன்வருவதே இன்றைக்கு முக்கியம். ஜனாதிபதி தற்போது சர்வகட்சி அரசொன்றின் அவசியம் பற்றி தொடர்ச்சியாக பேசி வருகிறார். நாட்டை மீட்டெடுக்க வேண்டியது தனிமனிதர் அல்லது தனிக்கட்சி ஒன்றின் வேலையாக இருக்க முடியாது. பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக வீற்றிருக்கும் சகல கட்சிகளுக்கும் இப்பொறுப்பு உள்ளது. இப்பொறுப்பை, பொதுவாகவே விமர்சனங்களை முன்வைத்து பின்வாங்கி நிற்கக்கூடிய சிறுபான்மை சமூகங்களின் கட்சிகள், ஏற்க முன்வந்திருப்பது அவதானிக்க வேண்டிய ஒன்று. தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன சாதகமான கருத்துகளை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தேசியப் பிரச்சினைகளில் சிறுபான்மையினர், குறிப்பாகத் தமிழர்கள், பங்களிப்பு செய்வதில்லை அல்லது தயங்கி பின்னிற்பதே வழக்கம் என்றொரு மனப்பான்மை தேசிய அரசியலில் நீண்ட காலமாகவே உள்ளது. இவ்வகையில், தேசிய அரசாங்கம் தொடர்பாக தமிழ்க் கட்சிகள் சாதகமான கருத்துகளை வெளியிட்டிருப்பது உற்சாகமளிப்பதாக உள்ளது.

2019 தேர்தல்களின் பின்னர் சிறுபான்மை இனங்களின் கோரிக்கைகள், தேவைகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும் ஒரு போக்கை அரசு கடைப்பிடித்து வந்தது. ஒரு தேசிய அரசாங்கம் அப்போக்குக்கு முடிவு கட்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் சிறுபான்மையின கட்சிகள் அக்கறை செலுத்துவதில்லை என்ற ஒரு கவலை தேசிய அரசியல் மட்டத்தில் இருப்பதால், சர்வகட்சி அரசில் அமைச்சர் மட்டத்திலோ அல்லது தேசிய சபையிலோ, இணைந்து கொள்வதன் மூலம் சிறுபான்மைக் கட்சிகள் நாட்டின் மீதான தமது அக்கறையை வெளிப்படுத்த முடியும்.

சர்வகட்சி அரசில் இணைந்து கொள்வதன் மூலம் அமைச்சுகளின் வாயிலாக மக்கள் சேவையாற்ற முடியும் என்று மக்கள் கருதக் கூடாது. இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் முக்கிய அமைச்சுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் தேசிய மட்டத்தில், இந்நாட்டின் சிக்கல்களை தீர்த்து நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பெரும் பணியில் ஈடுபடும் வாய்ப்பை தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பெறுகின்றன.

வழமையான தேர்தல் அரசியலுக்கு அப்பால், தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நாட்டை மேலும் ஸ்திரப்படுத்தவும், ஒன்றுபட்டு உழைக்கவும் எவ்வாறு உதவ முடியும் என்பதில் ஒரு புரிந்துணர்வை சிங்களக் கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தும் என நம்புகிறோம். தமிழ்க் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. எதிர்ப்பு அரசியலுக்கு பதிலாக பரந்த மட்டத்தில் ஓர் இணக்க அரசியலை உருவாக்க இச் சந்தர்ப்பம் உதவும்.


Add new comment

Or log in with...